Saturday, September 26, 2009

இஸ்லாமியப் பொருளியல்

இஸ்லாமியப் பொருளியல்

மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான வழியில் புசிக்க வேண்டாம். நீங்கள் அறிந்து கொண்டே பிற மனிதர்களின் பொருள்களிலிருந்து ஒரு பகுதியைப் பாவமான முறையில் நீங்கள் புசிப்பதற்காக அவற்றை அதிகாரிகளிடம் இலஞ்சமாகக் கொண்டு போகாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

இஸ்லாமியப் பொருளியல் கோட்பாட்டின் ஒரு முக்கிய அம்சத்தை இவ்வசனம் கோடிட்டுக் காட்டுகின்றது. தனியார் உடைமைக் கோட்பாட்டை வரவேற்றுப் போற்றுகின்ற அதேவேளை அதற்குச் சில அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளைப் புனித இஸ்லாம் விதித்திருக்கின்றது. இதன் மூலம் முதலாளித்துவம், பொதுவுடைமை (மார்க்ஸிஸம்) ஆகிய இரு கோட்பாடுகளிலிருந்தும் இஸ்லாம் வேறுபடுகின்றது.

தனியார் உடைமையை அடியோடு நிராகரிக்கின்ற மார்க்ஸிஸம், தனிமனிதனின் உணர்வுகளைக் கசக்கிப் பிழிந்து அவனை ஒரு நடைபிணமாக, நடமாடும் இயந்திரமாக ஆக்கி விடுகின்றது.

முதலாளித்துவமோ, கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைத் தனிமனிதனுக்கு வழங்கி, சிலர் வாழ பலர் வாடும் நிலையை உருவாக்கி விட்டது. நாட்டின் பொருளாதாரம், சில குறிப்பிட்ட தனிநபர்களின் கையில் சிக்கிக் கொள்கின்றற மிக மோசமான நிலையை முதலாளித்துவம் உண்டாக்கியிருக்கிறது.

ஒன்றுக்கொன்று எதிரான இவ்விரு கோட்பாடுகள் மனித மூளையில் உதிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே, இவற்றின் தீமைகளைக் கருத்தில் கொண்டு சீரான, நியாயமானதொரு பொருளியல் கொள்கையை அல்லாஹ் வகுத்தளித்து விட்டான்.

தொழுகை முடிந்தால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள். (62:10)

நீங்கள் (மனம் வருந்தி) மீண்டு விட்டால் உங்களின் மூலதனம் உங்களுக்கே சொந்தமானதாகும். (2:279)

உங்களுக்கு நாம் அளித்திருப்பதில் இருந்து (நல்ல வழியில்) செலவு செய்யுங்கள். (2:254)

இது போன்ற பல வசனங்கள் தனியார் உடைமையை ஏற்பனவாக அமைந்துள்ளன. மேலும், திருக்குர்ஆன் சொத்துரிமை – வாரிசுரிமை வழங்கியிருப்பதும் இதனை உறுதி செய்கிறது. அதேநேரத்தில் எந்த வழியிலும் பொருளீட்டலாம் என்ற முதலாளித்துவக் கொள்கைக்கு எதிராக திருக்குர்ஆன் பல இடங்களி; பேசுகிறது. அவற்றுள் ஒன்று தான் மேலும் வசனம்..

தவறான வழிகளில் பொருளீட்டக் கூடாது என்றும், தவறான வழிகளில் செலவழிக்கக் கூடாது என்றும் திருக்குர்ஆன் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்றி, ஸகாத் கடமையாக்கப்பட்டிருப்பதும், மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்திற்கு மேல் வஸிய்யத் - மரணசாசனம் செல்லாது என வரையறுக்கப்பட்டிருப்பதும், வணிகம், வேளாண்மை, தொழில் முதலான துறைகள் தொடர்பாகச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதும் தனியார் உடைமைக்கு விதிக்கப்பட்டுள்ள வரையறைகளாகும்.

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்