Friday, October 2, 2009

குடும்பக் கட்டுப்பாடு - இஸ்லாமியப் பார்வையும் அதன் சட்டங்களும்

1. இஸ்லாத்தின் பார்வையில் மனிதன்!

இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் அத்தனையும் மனித குலத்திற்கு நன்மை செய்யவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன என்ற வாதம் தவறானது. அத்தகைய கண்டுபிடிப்புகள் நன்மையானவையா? அல்லது தீமையானவையா? என்பதை, இவைனும், அவனது தூதரும் காட்டித் தந்துள்ள வழிமுறைகளை உரை கல்லாகப் பயன்படுத்தித் தான் அவற்றைத் தீர்மானிக்க முடியுமே தவிர, அவைகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பதற்காக அவைகள் மனித குலத்திற்கு நன்மை செய்பவையாகத் தான் இருக்கும் என்ற முடிவுக்கு உடனே வந்து விட முடியாது. அத்தகைய கண்டுபிடிப்புகள் மனித வாழ்வில் ஒழுக்க விழுமங்களைப் பேணச் செய்து விடும் என்றும் நம்ப முடியாது. அவைகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்ற ஒரே வாதத்திற்காக, நீதி நெறிமுறைகளைப் புறந்தள்ளி விட்டு, அவற்றை மனித வாழ்வில் அமல்படுத்தவும் முடியாது. அவ்வாறு செய்வது மனித இனத்தின் சீரழிவுக்குத் தான் வழி வகுக்குமே அல்லாது, மனிதனை மனிதனாக வாழச் செய்து விடாது.

நீதி நெறி முறைகளும், ஒழுக்கங்களும் இஸ்லாத்தோடும், அதன் மதக் கோட்பாட்டோடும் பிண்ணிப் பினைந்தவை. ஒழுக்க விழுமங்களையும், இஸ்லாத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க இயலாது. அப்படிப் பிரித்துப் பார்க்க முடியாது. அது தான் இஸ்லாத்தின் கருக் கொள்கையாகும். அது தான் இறைக் கட்டளையும் கூட.

இஸ்லாத்தின் நியதிப்படி, நம்முன் தெரிகின்ற இந்த பிரபஞ்சமும் அதன் காட்சிகளும், ஒரு தூய தெய்வீக நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கையின்பால் சார்ந்ததாகும். இவை யாவும் வீணுக்காக இறைவனால் படைக்கப்படவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நியதியின்படி படைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, ஒவ்வொரு ஊயிரும் அது படைக்கப்பட்டதன் நோக்கத்தை, அவை நிறைவேற்றியேயாக வேண்டும்.

மேலும், மனிதன் என்ற இந்த உயிரினம் தான் இந்தப் பிரபஞ்சத்தில் இறைவனது முக்கிய படைப்பு. அவனது தகுதியும், அந்தஸ்தும் மற்ற எல்லா உயிரினங்களை விடவும் சிறந்தது. ஏனெனில், இப்பூமியில் மனிதனின் நிலை என்னவெனில், இறைவனது கட்டளைகளை சிரமேற் கொண்டு செயல்படுத்துபவன் என்ற நிலையில் இருக்கின்றான்.

(நபியே!) இன்னும் உமதிரட்சகன் மலக்குகளிடம், நான் பூமியில் (என்னுடைய) பின்தோன்றலை (ஆதமை) நிச்சயமாக ஆக்கப் போகின்றேன். (அல்குர்ஆன் 2:30)

மேலும், மனிதனுக்காக பூமியில் உள்ளவற்றையும், வானங்களில் உள்ளவற்றையும் வசப்படுத்தித் தந்துள்ளான் இறைவன்.

(மனிதர்களே!) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதையும், அவன் தன் அருட்கொடைகளை (அவற்றில்) வெளிப்படையானவற்றையும், மறைவானவற்றையும் உங்கள் மீது நிறைவாக்கியிருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (31:20)

இதன் மூலம் மற்றெல்லா மதங்களையும் விட இஸ்லாம், மனிதனை ஒரு தனிப்பட்ட அந்தஸ்துள்ள உயர்படைப்பாக கருதுகிறது.

மனிதனின் படைப்பைப் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது,

நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான படைப்பாகப் படைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் :95:04) என்கிறது.

மேலும் இஸ்லாம் மனிதனை நன்மையின்பால் ஏவுகிறது. சக மனிதனுக்கு உதவி வாழவும் பணிக்கிறது.

அத்துடன், அல்லாஹ்வை - அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாகவும் (அனைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால்) சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், தொழுகையை அவர்கள் நிறைவேற்றுவதற்காகவும், ஜகாத்தை அவர்கள் கொடுப்பதற்காகவுமே தவிர (வேறெதனையும்) அவர்கள் (அதில்) கட்டளையிடப்படவில்லை. இன்னும் இது தான் நேரான மார்க்கமாகும். (98:06)

ஆனால் அந்த நேரான வழி எது என அறிவுறுத்தாமல், கற்றுக் கொடுக்காமல் மனிதனைக் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இறைவன் விட்டுவிடவில்லை. இறைவன் காட்டித் தந்துள்ள அந்த நேரான வழியைப் பின்பற்றினாலன்றி பாவ மீட்சி இல்லை. மேலும், மனிதன் இயற்கையிலேயே பாவப்பட்டவன் (ழசபைiயெட ளுin) என்ற தத்துவத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, ஒவ்வொரு ஆத்மாவும், அதனதன் செயல்களுக்குப் பொருப்பாகும் என்று அறிவுறுத்துகின்றது.

2. மனிதனுக்குள்ள சுதந்திரம்

சுதந்திரம் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டோமானால், அந்தச் சுதந்திரத்தை முழுமையாகப் பெற்றவன் அல்லாஹ் ஒருவனே. ஆனால் சில வரையறைகளுக்கு உட்பட்டு மனிதனும் சில சுதந்திரங்களைப் பெற்றுள்ளான். ஏனெனில், ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்த போது, மற்றெல்லா உயிரினங்களை விடவும், மலக்குகளை விடவும் தனித்துக் காட்டிய சிந்தனா சக்தியை மனிதனுக்கு இறைவன் வழங்கினான். அதன் மூலம், இறைவனது சட்ட திட்டங்களை ஏற்று நடக்கவும், நடக்காதிருக்கவும் மனிதன் சுதந்திரம் பெற்றுள்ளான். இறைவன் மனிதனை, இயற்கையின் சட்ட திட்டங்களுக்கு பணிந்து நடக்குமாறு பணித்துள்ளான். அந்தக் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் போது, வானவர்களின் தரத்தை அடைகின்றான். அவற்றை மீறும் போது மிருகத்திலும் கேவலமானவனகா மாறி விடுகின்றான்.

இறைக்கட்டளை மீறுபவர்களi திருமறை இப்படிக் கூறுகிறது :

நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரன், மிக்க நன்றி கெட்டவன். (அல்குர்ஆன் 14:34)

மனிதனது, ஒவ்வொரு செயல்களும் அவனது பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவனது ஒவ்வொரு தவறுகளுக்கும் மறுமையில்பதில் சொல்லக் கடமைப்பட்டவன். மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களும், பொறுப்புகளும், ஒழுக்க விழுமங்களும், இவ்வுலகில் அவன் வாழும் காலத்தில் இறைவனுக்கும் அவனது கட்டளைகளுக்கும் பணிந்து, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களின்படி தம் வாழ்வை அமைத்துக் கொள்வதன் மூலம், அவன் தனது இறைவனாகிய அல்லாஹ் இருக்கின்றான். அவன் தான் நம்மைப் படைத்தான். அவனிடமே நம் மீட்சி இருக்கிறது என்ற சத்திய சாட்சிக்கான தேர்வுக் களத்தில் வெற்றி பெற்றவனாகின்றான்.

3. மனிதனது பொறுப்புக்கள்

மனிதன் என்பவன் ஒரு சமுதாய விலங்கு ஆவான். அவனால் தனது வாழ்வை தானாகவோ, தனித்தோ அதை;துக் கொள்ள இயலாது. மனிதன் என்பவன், மனிதச் சமுதாயம் என்ற கூட்டு வாழ்வில் ஓர் அங்கமாக இருக்கின்றான்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒவ்வொருவரும் பாதுகாவலர் ஆவார். அவர் தன் பாதுகாவலுக்கு உட்பட்ட அனைத்துக்கும் பொறுப்பானவர் ஆவார். (புகாரி)

மேலும் இஸ்லாத்தைப் பொறுத்தவரை, துறவறம் என்பது கிடையாது, எனவே மனிதன் துறவறம் மேற்கொள்வதை தடை செய்வதன் மூலம், தன் பொறுப்புக்களிலிருந்து தவிர்ந்து, வாழ்க்கைப் பிரச்னைகளிலிருந்து விலகி வாழ்கின்ற வாழ்க்கையை விட்டும் அவனை இஸ்லாம் தடுக்கின்றது. மேற்கண்ட பிரச்னைகளிலிருந்து ஒதுங்கி, மறுமையில் வெற்றி பெறுவதற்குண்டான எளிய வழியாக மனிதன் துறவறத்தைக் கைக் கொள்ள முடியாது.

மேலும், மனிதனது உண்மையான வெற்றி என்பது, அவன் ஆற்றும் நற்பணிகளிலிருந்தும், அவனது நற்செயல் முறைகளின் மூலம் கணிக்கப்படுகிறது. இந்த உலகில் அவன் செயல்படுத்தும் நற்செயல்களே, மறுமையில் அவனை வெற்றி பெற்ற மனிதனாக அடையச் செய்வதற்குண்டான நல்வழியாகும். அந்த நல்வழியை அடைவதற்கு, இவ்வுலகில் ஏராளமான இடர்பாடுகள் வந்து அவனது சுதந்திரத்தைப் பறிக்கவும் கூடும். அவனது சுதந்திரத்தைப் பறிக்கும் கட்டுப்பாடுகளை தனது நன்மைக்கே, தனது சமூகத்தின் நன்மைக்கே எனக் கருதும் போது அவன் வாழ்வில் வெற்றி பெற்ற மனிதனாகின்றான்.

அதை விடுத்து அந்தக் கட்டுப்பாடுகளை தனக்கு இடப்பட்ட அடிமைச் சங்கிலி எனக் கருதுவானாகில், அவனது படைப்பின் நோக்கம் அங்கே வெற்றி பெறாது. இறைவனின் கட்டளைகளையும், இயற்கையிலேயே அந்தக் கட்டளைகளின் பின்னணயில் உள்ள பூரணத்துவத்தையும் சிந்திக்கவே அவனுக்கு சிந்தனா சக்தி வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய நிலைகளைச் சிந்தித்து, மதித்து நடப்பானாகில், இப்பூலகில் மனிதனை, இறைவன் தன்னுடைய பிரதிநிதி என்ற அந்தஸ்தைக் கொடுத்து, மற்றெல்லா படைப்பினத்தையும் விட மேலான படைப்பாகப் படைத்ததற்காக நன்றி செய்தவனாவான். அதுவரை மனிதன் அமைதியான வாழ்வைப் பெறுவான். அதை மீறி, இயற்கையை எதிர்த்து, இறைக் கட்டளைகளை மீறி நடப்பானாகில், மனிதனுக்கு இம்மையிலும், மறுமையிலும் நஷ்டம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்!?

4. இறைச் சட்டங்கள்

இறைச் சட்டங்கள் என்பது நேராக வழியைக் காண்பிக்கக் கூடியவைகள் ஆகும். அவை, மனிதனுக்கு நன்மை எது!, தீமை எது! எனப் பிரித்து அறிவிக்கும் இறைச் சட்டத் தொகுப்பும், வழிகாட்டுதல்களும் ஆகும். அத்தகைய சட்டங்களைக் கொண்டது தான் இறைவேதமாகிய திருக்குர்ஆன் ஆகும்.

திருக்குர்ஆனைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது,

தன் அடியார் (முஹம்மது அவர்கள்) மீது (அசத்தியத்திலிருந்து சத்தியத்தைப் பிறித்தறிவிக்கும்) ஃபுர்கானை – அது அகிலத்தார்க்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக் கூடியதாக இறக்கி வைத்தானே, அத்தகையோன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 25:01)

திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரீல் (அலை) எனும் வானவர் தூதர் மூலம் இறைவனால் இறக்கியருளப்பட்டது. அந்தத் திருக்குர்ஆன் தான் இறைவனது கட்டளைகளைக் கொண்ட மூல நூலாகும். அதில் தான் மூலச் சட்டங்களும் அத்துடன் அதனூடே சில விதிவிலக்குகளும் உள்ளன. திருக்குர்ஆனில், மனிதனது வாழ்வியலுக்கு வேண்டிய அனைத்து வழிகாட்டுதல்களும், சட்டங்களும், அடிப்படைக் கொள்கைகளும் உள்ளன.

மேலும், திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான் :

நாம் எம் திருத்தூதராகிய முஹம்மதிற்கு திருக்குர்ஆனை மட்டும் அருளவில்லை. அத்துடன் ஞானத்தையும் வழங்கியுள்ளோம் என்கிறான். அத்தகைய ஞானப் பேழை தான், திருத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சொல்லும் செயலும், நடைமுறையும் கொண்ட நபி மொழித் தொகுப்புகள் ஆகும்.

எனவே, திருக்குர்ஆனில் உள்ள சட்டங்களுக்கு மேலதிக விளக்கம் பெற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளான,நபிமொழித் தொகுப்புகள் (ஹதீஸ்) மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இறைவன் தன் திருமறையில், எனக்கும் (அல்லாஹ்வுக்கும் ) என் தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். (3:32)

எனவே, நாம் எடுத்துக் கொண்ட இந்த தலைப்புகளை இறைவழிகாட்டுதல்களை, இறைவனத தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறைகளையும், மேலும் அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையும் கொண்டு ஆராயப் புகுவோம்.

5. திருக்குர்ஆன் ஒரு மருத்துவ நூல் அல்ல!

நமது தலைப்பை ஆராய்வதற்கு நாம் உரைகல்லாகப் பயன்படுத்தும், திருமறையானது ஓர் மருத்துவ நூல் அல்ல. மாறாக, மனித இனத்துக்கு நேர்வழி காட்டக் கூடியதும் மனிதன் உயிர் வாழக் கூடிய இவ்வுலகிலும், அவன் மரணித்த பின் உள்ள மறுமை வாழ்க்கையின் வெற்றிக்கான ஆயத்தப்படிகளை வழங்கக் கூடிய ஆன்மீக வழியைக் காட்டக் கூடியதாகும். இதையே, திருமறை கூறுகிறது :

நபியே! நீர் கூறுவீராக! (இவ்வேதம்) விசுவாசங் கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும், (உடல் மற்றும் மனநோய்களை) குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. (திருக்குர்ஆன் 41:44)

6.மனிதன் இறைவனது பிரதிநிதி

இறைவன் மனிதனைப் பற்றிக் கூறும் போது,

அவன் தான் (உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு) பிரதிநிதிகளாகப் பூமியில் உங்களை ஆக்கினான் (6:165)

மனிதனானவன் ஒன்று இவைனுடைய கட்டளைகளை ஏற்று, அவற்றை இப்பூமியில் செயல்படுத்தும் இறை அடிமையாகவும், இரண்டாவதாக, தனக்கு முன்னாள் இத்தகைய இறைவனது கட்டளைகளை ஏற்று நடந்து விட்டு வழிகாட்டிச் சென்று விட்ட உத்தம நபிமார்கள் மற்றும் அவர்கள் வழி நடந்த நம் முன்னோர்களின் பிரதிநிதிகளாகவும் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கின்றான்.

எனவே, தனது அடிமையாகிய இந்த மனிதன், தன்னுடைய கட்டளைகளை அவன் சிரமேற் கொண்டு நிறைவேற்றுவதற்கு நல்ல உடல் நலம் மிக்கவனாகவும் இருக்க வேண்டும் என்பது இறைவனது எதிர்பார்ப்பு. இறைவனுடைய இந்த எதிர்பார்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ள மனிதன், தான் இவ்வுலகில் ஆற்ற வேண்டிய இறைப் பிரதிநிதித்துவப் பணிகளுக்கு முழுத் தகுதி உள்ளவன் என்பதை நிரூபணம் செய்வது தலையாய கடமையாகிறது.

அதற்கு மனிதனது நலத்தையும், உடல் நலத்தையும் பேண வேண்டியது அவசியமாகின்றது. மேலும், அந்த மன நலத்தையும், உடல் நலத்தையும் இறைவன் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின்படி அமைத்துக் கொள்ளவும் வேண்டும். இதன் மூலம் இறைவன் தன்னைப் படைத்ததன் நோக்கத்தை நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.

இதையே ரசூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

பலமில்லாத நம்பிக்கையாளனை விட பலமுள்ள நம்பிக்கையாளனை இறைவன் மிகவும் நேசிக்கின்றான். (முஸ்லிம்)

மேற்கண்ட நபி மொழி வலியுறுத்துவது என்னவென்றால், ஒரு மனிதன் தன்னுடைய ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க முயற்சித்துக் கொண்டும் இருத்தல் வேண்டும். மேலும், இங்கே ஆரோக்கியம் என்பது உடல் நலம், மனநலம், மற்றும் சமுதாய நலம் கொண்டதாக இருத்தல் வேண்டும். மேலும், அச்சமுதாயம் நோயிலிருந்து மட்டும் நீங்கியதாக இருத்தல் கூடாது. அதை விட தளர்ந்த, முதுமையான செயல்பாடுகளற்ற சமுதாயமாகவும் இருத்தல் கூடாது.

அத்தகைய நலத்தை எவ்வாறு பேண வேண்டும் என இறைமறை கூறுகிறது என ஆராய்ந்தால்,

மனிதர்களே! பூமியிலுள்ளவற்றிலிருந்து (உண்ண) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன், உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். (2:168)

இதன் மூலம இறைவன் எதை உண்ண வேண்டும் எதை உண்ணக் கூடாது என்று அறிவுறுத்துவதன் மூலம், தன் அடிமையின் ஆரோக்கியத்தில் இறைவன் எந்தளவு அக்கறை கொண்டிருக்கிறான் என்பது புரிய வரும்.

அதாவது, இறந்த பிராணிகளின் மாமிசம்,இரத்தம், பன்றிக் கறி மற்றும் இறைவனது பெயர் சொல்லி அறுக்கப்படாத பிராணிகளின் மாமிசம் போன்றவைகள் இறைவனால் உண்ண தடை செய்யப்பட்டவைகள். மேலும் இவைகளை உண்பதன் மூலம் என்ன என்ன தீமைகள் உண்டாகின்றன என இன்றைய அறிவியல் உலகமும் ஒப்புக் கொண்டுள்ளது. மனிதன் மேல், அவனது ஆரோக்கியத்தின் மேலம் அக்கறை கொண்டுள்ள மார்க்கம் எதுவென்றால், ஏக இறையோனாகிய அல்லாஹ் அருளிய மார்க்கமான இஸ்லாம் ஒன்றேயாகும்.

அதுபோலவே, இஸ்லாம் மதுவையும், சூதாட்டத்தையும் தடை செய்துள்ளது. இவ்விரண்டும் தான் இன்று மிகப் பெரிய சமுதாய சீரழிவுக்கும், பொருளாதார சீரழிவுக்கும் மக்களை ஆட்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுவரை உணவையும், குடிப்பையும் எவ்வாறு பேணி உடல்நலத்தைக் காப்பது என அறிவுறுத்திய இறைவன், அடுத்து சமுதாய வாழ்க்கையில் கூட்டு வாழ்க்கையில் அவனது செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றான்.

பாதுகாப்பின்மை, உதவியில்லாத நிலையும் ஒரு மனிதனுக்கு அமைதியற்ற நிலையை உருவாக்கும். அந்த அமைதியற்ற நிலையிலிருந்து மனிதனைப் பாதுகாக்க, இறைவனைத் துதிப்பதன் மூலம் அந்த மன அமைதியைப் பெற்றுக் கொள்ளுமாறு இறைமறை மனிதனுக்கு அறிவுறுத்துகிறது.

எத்தகையோரென்றால், அவர்கள் (மெய்யாகவே) விசுவாசங் கொண்டார்கள், இன்னும் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. (ஏனென்றால்) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீராக! (அல்குர்ஆன் 13:28)

இன்றைய நிலையில், மனிதனின் மன அமைதி கெடுவது தான் ஏராளமாக குற்றங்களுக்குக் காரணமாகி விடுகின்றது என்பது ஆய்வுகள் கூறும் உண்மையாகும். எனவே, மனிதன் தனக்கு இடர்கள், துன்பங்கள் நேரும் பொழுது, தன்னுடைய இயலாமையை, பாதுகாப்பில்லாத தன்மையை, உதவிக்கு என்று சரியானதொரு நிலை இல்லாமையைக் குறித்து ஏங்காமல், அதற்கு வடிகாலாக குற்றச் செயல்களில் ஈடுபடால், இறைவனை அந்த கன நேரத்தில் துதி செய்வதன் மூலம், அவனுக்குத் தேவைப்படும் மன அமைதி, உதவி ஆகிய அனைத்தையும், ஒருங்கே பெற்றுக் கொள்ளலாம். துதி செய்வத என்பது மணிகளை உருட்டிக் கொண்டு தியானத்தில் இருப்பதன்று. மாறாக, இறைமறையின் வழிகாட்டலை அந்த சமயத்தில் நினைவு கூர்வது, என்பதன் மூலம் மன அமைதி பெறுவதாகும்.

உதாரணமாக, மது அருந்துபவர்களிடம் நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்? எனக் கேடடால், அவர்கள் தவறாது சொல்லும் காரணம் எதுவென்றால், வீட்டில் பிரச்னை,அலுவலகத்தில் பிரச்னை, அதனால் எழுந்த மனக் குழப்பத்தையும், உடல் சோர்வையும் போக்கிக் கொள்ளத் தான் குடிக்கின்றேன் என்பார்கள்.

ஆனால் இவ்வாறு அவர் குடிப்பதற்கு முன் எனதிறைவன் மது அருந்தவதைத் தடை செய்திருக்கின்றான் என்ற இறைமறை வசனத்தை நினைவு கூர்வதன் மூலம், அவரது செயலிலிருந்து விடுபட்டுக் கொள்வதோடு, அவனது ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

மனிதன் தன்னைத் தனித்துப் பிரித்து வாழும் போது தான் மேற்கொண்ட மனநிலை, உடல்நிலைச் சோர்வுகளுக்கு உடனடியாக ஆட்பட்டு விடுகின்றான். ஆனால், இஸ்லாமானது, மனிதனை தனிப்பட்டவனாக அவனளவில் வாழ அனுமதிப்பதில்லை.

இஸ்லாமிய அமைப்பும் அதன் சமுதாய வாழ்வும் சகோதரத்துவத்தின் கீழ் கட்டப்பட்டதொரு தொகுப்பாகும். இதைப் பற்றி எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் குறிப்பிடும் பொழுது,

இந்த முஸ்லிம் சமுதாயமானது (உம்மத்) ஒரு உடல் போன்றது. அந்த உடலின் ஏதாவது ஒரு பாகம் நோயுறுமானால், முழு உடலும் அதன் வலியை உணர்வது போல, இந்த இஸ்லாமிய உம்மத்தில் ஏதாவது ஒரு முஸ்லிமிற்கு ஏற்படும் துன்பம், அது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட துன்பமாகும் என்றார்கள். (புகாரி)

எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் தன் சக முஸ்லிமுடைய நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் தான் தனிமையில் வாழ்பவன், உதவியற்றவன் என்ற மனோபாவம் கொள்வதை அடியோடு தடை செய்கிறது. இதன் மூலம் இஸ்லாமிய சமுதாயமானது உடல் அளவில் மன அளவில் ஆரோக்கியமான சமுதாயமாக திகழ முடிகின்றது.

அதே போல உடல் இச்சைகள் என்பது மனிதனுக்கும், ஏனைய ஜீவராசிகளுக்கும் இறைவன் பொதுவாக இயற்கையானதொரு செயலாகப் படைத்துள்ளான். விலங்குகளைப் பொறுத்தவரை, அவைகளது உடல் இச்சைகளைப் பொறுத்து, அவற்றைத் தனித்துக் கொள்ள எந்த வரையறையும் வகுக்கப்படாதவை. அதேபோல, அவற்றினிடையே உடல் இச்சைகள் ஏற்படுவது என்பது காலநிலைகளை (ளுநயளழn) ப் பொறுத்து அமைகின்றன.

ஆனால், மனிதன் விலங்கிலிருந்து வேறுபட்டவன். மனிதனுக்கென்றே தனியான பிரத்யேகமான உடல் உறவுச் சட்டங்கள் இறைவனால் வகுத்தளிக்கப்பட்டுள்ளன. அதேபோல, உடல் இச்சைக்கான உந்துதல்கள் எல்லா காலநிலைகளிலும், எந்த நேரத்திலும் எழக் கூடிய நிலையில் மனிதனின் இயற்கை அமைப்பு உள்ளது. மேலும் மனிதன் தன்னுடைய உடல் இச்சைகளை திருமண பந்தத்தின் மூலம் மட்டுமே தீர்த்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளான். அதன் மூலம் மட்டுமே குழந்தைப் பேற்றை அவன் அடைந்து கொள் வேண்டும். மேலும், அந்த மண வாழ்வு, ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டின்படி அமைய வேண்டும்.

இந்த திருமண பந்தத்தின் மூலம் விளையும் சமுதாயம்தான், ஒரு அமைதியான சமூக வாழ்வுக்கு அடித்தளமாக அமையும்.

அதேபோல குடும்பத்தில் கணவனுக்கென்று சில பொறுப்புகளும், மனைவிக்கென்று சில பொறுப்புகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கணவன் வாழ்க்கைக்கு வேண்டிய வாழ்வாதாரம் வசதி போன்றவற்றிற்கு தொழில் செய்து பொருளாதாரம் திரட்டவும், மனைவியானவள் கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் வேண்டிய பணிவிடைகள், குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்ற பணிகளில் ஈடுபடுதல், என அவரவர்க்கு எற்ற பணிகளை மனநிலை, உடல்நிலை தகுதிகளைக் கொண்டு இஸ்லாம் பிரித்துத் தந்துள்ளது.

இதன்மூலம், தொழில் மற்றும் வேலையின் காரணமாக துவண்டு வரும் கணவனை, இன்முகத்துடன் வீட்டில் இருக்கும் மனைவி வரவேற்று உபசரிப்பு வழங்குவானானால், அவன் ஏன் குடியையும், தன்னுடைய இச்சையைத் தீர்த்துக் கொள்ள விபச்சாரத்தையும் நாட வேண்டும்?! கணவன் மனைவியைக் குறிப்பறிந்தும் மனைவி கணவனுடைய குறிப்பறிந்தும் நடப்பார்களானால், குடும்பம் என்பது அமைதிப் பூங்காவாகத் திகழும்.

மேற்கண்ட செயல்முறைகளைக் கொண்ட குடும்ப அமைப்பு சிதறியதன் காரணமாகவும், அத்தகைய சமுதாய வாழ்வு சிறக்க வழி வகுக்கப்படாததன் காரணமாகத் தான் இன்றைய மேலைநாடுகள் முன்னர் நாம் பார்த்த சீரழிவுகளை அடைந்து கொண்டிருக்கின்றன.

7. திருமணமும் அதன் நோக்கமும் :

திருமணமும் அதன் தூய நோக்கமும் இன்றைய மேலைநாட்டுச் சமுதாயத்தில் உணரப்படாமலேயே இருக்கின்றது. ஆனால் இஸ்லாம் திருமணம் பற்றிய தனது கொள்கையில் உயர்ந்த நிலையைக் கொண்டுள்ளது. மேலும், திருமணம் என்ற பந்தத்தைத் தவிர்த்து குடும்பக்கட்டுப்பாடு அல்லது கருத்தடை பற்றிச் சிந்திக்க இயலாது. எனவே, திருமணத்தின் உண்மையான தூய நோக்கத்தை அறிவதன் மூலம், குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டத்தின் நிலை பற்றி நாம் ஒரு முடிவுக்கு வர இயலும்.

இறைவன் இயற்கையாகவே எல்லா உயிர்களிடத்திலும் பாலியல் உணர்ச்சிகளை ஏற்படுத்தி இருக்கின்றான். மனிதன் தனது சமுதாய வாழ்வில் தனது பாலியல் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்ள, அவற்றின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள திருமணம் என்ற பந்தத்தைக் கடைபிடித்துக் கொள்ளுமாறு, இறைவன் ஆதி பிதா ஆதம் (அலை) முதல் நமக்குக் கற்றுத் தந்த வழிமுறையாகும்.

திருமணம் என்ற இந்த பந்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்டு விட்ட பிறகு, இது வரை அவர்களுக்கிடையே இருந்த பாலியல் தடைகள் விலக்கப்படுகின்றன. இது வரை அவர்கள் இருவருக்கும் இடையே குற்றமாகக் கருதப்பட்ட ஒரு செயல், திருமண பந்தத்திற்குப் பின் சட்டப்படி அனுமதியளிக்கப்பட்ட செயலாக மாறி விடுகின்றது. இதையடுத்து, திருமண பந்தம் மூலம் இணைந்த இருவரும், தங்களது பாலியல் உணர்ச்சிகளை, தாங்கள் அல்லாத மூன்றாவது நபரிடத்திலே வைத்துக் கொள்வதும், இத் திருமண நடைமுறை மூலம் தடை செய்யப்படுகின்றது. (திருமணத்திற்கு முன்னால் பிறரிடத்தில் பாலியல் உறவு வைத்துக் கொள்வது இஸ்லாத்தில் தண்டனைக்குரிய செயலாகும்).

எனவே, தம்பதிகள் இருவரும் சமுதாயம் என்னும் அமைப்பில் கணவன்-மனைவி என்ற பந்தத்தில் குடும்பமாகி, தமது இல்லற வாழ்வின் பயனாக, தம் உணர்வுகளை ஆகுமான வழியில் வைத்துக் கொண்டவர்களாகவும், அந்த இணைப்பின் பயனாக தம் சந்ததிகளைப் பெருக்கி, மனிதன் என்ற உயிரி, இந்த உலகம் உள்ள காலம் வரை தம் இனத்தை இப் பூவுலகில் நிலை நிறுத்துவதற்குண்டான இறை ஏற்பாடாக இந்தத் திருமண பந்தம் திகழ்கின்றது.

இங்கே குடும்பக்கட்டுப்பாடு அல்லது கருத்தடை என்பது, அந்த இறை ஏற்பாட்டை உதாசினம் செய்து, தம் மழலைகளில் எண்ணிக்கையை ஒரு வரையறைக்குள் வைத்துக் கொள்ள மனிதன் கண்டுபிடித்த ஏற்பாடாகும்.

உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும் (அவ்வாறே, வாழ்க்கைத் துணைவரில்லாத) உங்களுடைய ஆண் அடிமைகள், இன்னும் அடிமைப் பெண்களிலிருந்து நல்லொழுக்கமுள்ளவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். (திருமறைக் குர்ஆன் 24:32)

இதன் மூலம் திருமணம் என்ற பந்தத்தை அனைவர் மீதும் இறைவன் கடமையாக்கி வைத்துள்ளான் என்பதையும், இஸ்லாத்தில் துறவறம் இல்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

இதையே, நபி (ஸல்) அவர்கள், ஒருவன் அல்லது ஒருத்தி திருமணம் செய்து கொள்வாராகில், அவன் அல்லது அவள் என்னுடைய நடைமுறையைப் பேணியவர்களாவார்கள். (புகாரி)

மேலும், இறைப்பிரதிநிதியாகிய இந்த மனிதன், திருமணம் என்ற பந்தம் மூலம், இறைவன் அவனுக்கு வழங்கிய, மனித உற்பத்தி எனும் தன்மை மூலம், இப் பூவுலகை உயிரோட்டமுள்ள களமாக நிலைத்திருக்கச் செய்ய விரும்புகின்றான். அத்தகைய உயிரோட்டமுள்ள களத்திற்கு, ஆரோக்கியமான மனித உற்பத்தியை சமூகம் பெற்றிருப்பது அவசியமாகின்றது.

மேலும், திருமணம் என்பது இரு உடல்கள் இணைந்து தம் இச்சையைத் தணித்துக் கொள்ளும் செயல்பாடு மட்டும் அல்ல. மாறாக, திருமணத்தின் மூலம் இறைச்சட்டம் காட்டிய வழியில் தம் உணர்வுகளை பங்கிட்டுக் கொண்டவர்களாகவும் ஆகி விடுகின்றார்கள். மேலும், திருமணம் என்ற செயல்பாடு மழலைகளின் வரவினால் மட்டுமே பூரணத்துவம் அடைகின்றது. அந்தப் பூரணத்துவத்திற்கு எதிரிடையான ஒன்று தான் குடும்பக்கட்டுப்பாடு அல்லது கருத்தடை ஆகும்.

8. பொருளாதார நோக்கம்?

இன்றைய நாகரீக உலகில் குடும்பக் கட்டுப்பாடு என்பது மருத்துவ நோக்கில் அல்லாமல், சமூகப் பொருளாதாரம் மற்றும் நாகரீகம் என்ற போர்வையில் அமைந் மேற்கத்திய காலச்சாரத்தின் பின்னணிகள் தான், குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தையும், அதற்குத் துணையாக அதன் சாதனங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலையை மக்கள் மனதில் ஏற்படுத்தின. இந்த மேலை நாட்டுக் கலாச்சாரமும், அவர்களது பார்வைகளும், எண்ணங்களும் குடும்ப அமைப்பில் பெற்றோர் எனும் தகுதியானது தம் மீது தேவையில்லாத பொறுப்புகளைச் சுமத்தக் கூடியது என்ற மனநிலையைத் தோற்றுவித்ததும் ஒரு காரணமுமாகும்.

மனிதனது வாழ்க்கை என்பது பலதரப்பட்ட பிரச்னைகளும், இடர்பாடுகளும் நிறைந்த ஒன்று. மனிதனது வாழ்வில் ஏற்படும் இந்த இடர்பாடுகளை எதிர்த்து நின்று வாழ மனிதன் துணிவு பெறுவதை விட்டு, தனது சலன புத்தி மற்றும் சுயநலம் காரணமாக அதனினின்றும் ஒதுங்கி, என்றும் எப்பொழுதும் தன் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மனிதன் என்ற நிலையில் தனக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்ற மனமில்லாமல், அத்தகைய பொறுப்புகளில் இருந்து தவிர்ந்து வாழ, இயற்கைச் சட்டத்தில், இறைவனது நியதியில் கை வைக்க ஆரம்பித்து விட்டான். மனிதனது இத்தகைய செயல்கள் இறை நியதியை எதிர்த்து போர் தொடுப்பதற்குச் சமமாகும். இத்தகைய செயல்களினால் இன்றைய மனித இனம், அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை ஜப்பான், சீனா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தைகளின் பிறப்பு வெகுவாகக் குறைந்து விட்டதன் காரணமாக, வயது முதிர்ந்தோர்களின் எண்ணிக்கை உயர்ந்து, இளையதலைமுறையினருக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதன் காரணமாகத் தங்களது திட்டத்தை தாங்களே நொந்து கொண்டு, மீண்டும் மழலைகளை அதிகம் பெற்றுக் கொள்ளுமாறு மக்களைத் தூண்டி வருகின்றது. ஆனால், பிள்ளை பெறுவதையே வெறுத்து விட்ட அந்த மேலை நாட்டுச் சமூகம், அரசாங்கத்தின் வேண்டுகொளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை விட்டும் வெகு தூரத்திற்குச் சென்று விட்டதை அந்த நாடுகளின் நடக்கின்ற நடப்புகள் தெரிவிக்கின்றன.

இன்று நம் நாட்டைப் பொறுத்தவரை, குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டத்தை, பொருளாதார நோக்கில் தான் கடைபிடிக்கப்படுகின்றது. அதிகம் பிள்ளை பெற்றால், குடும்பச் செலவு அதிகரிக்கும், சொத்துப் பங்கீடு அதிகமாகும் என்பது போன்ற காரணங்களும், அதிகம் பிள்ளை பெற்றால் அன்னை உடல்நலத்திற்குக் கேடு என்பன போன்ற வாசகங்களும் தான், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஆதரிக்க மக்களைத் தூண்டுகின்றது. ஆனால் அன்னையின் உடல்நலத்திற்குக் கேடு என்று சொல்லக் கூடியவர்கள், மருத்துவ வசதியே அல்லாத அந்த முந்தைய காலங்களில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு தங்களது சந்ததிகளைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது. இயந்திரங்களும், வாகனங்களும் இல்லாத அந்த காலத்து மக்கள் எவ்வாறு தங்களது வாழ்க்கையை நடத்தினார்கள் என்பதையும் இந்த சமூகம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பொருளாதார நோக்கில் பார்த்தால், இறைவன் கூறுகின்றான் :

வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் (6:151)

அவர்களை கொலை செய்வது பாவமாகும். (17:31)

மனிதர்களே, உங்களது பொருளாதாரம் பாதிக்கப்படும், வறுமை நிலைக்குத் தள்ளப்படுவோம் எனப் பயந்து தங்கள் குழந்தைப் பேற்றைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், உங்களுக்கும், உங்களைப் போன்ற அனைவருக்கும் உணவு புகட்டக் கூடியவன், வாழ்வாதாரம் வழங்கக் கூடியவன் நான் என்கின்றான் இறைவன். ஒரு தாய்ப் பறவையானது தன் குஞ்சுகளின் மேல் எவ்வளவு அக்ககறை கொண்டு உணவு தேடி அதற்குப் புகட்டுகின்றது. இறைவன் தன்னுடைய தகுதிகளை நம் முன் வந்து காண்பிக்க வேண்டும் என்பதில்லை. புறவையினங்களும், விலங்கினங்களும் தங்களது சந்ததிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் இடைவிடாது உணவுக்கும், இருப்பிடத்திற்குமுண்டான போட்டியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதனோ அத்தகைய முயற்சிகளைச் செய்யாமல், சோம்பேறித்தனமாக, பிரச்னைகளிலிருந்து ஒதுங்கி வாழவே ஆசைப்படுகின்றான்.

மனிதனும் ஏனைய ஜீவராசிகளும் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்ட இந்த பூமயில், வாழ்வாதாரம் இன்றி வெறுமனே அத்தனை உயிரிகளையும் படைத்து உலவ விடவில்லை. ஆவைஅவைகளுக்குரிய ஏற்பாட்டையும் செய்தே வைத்திருக்கின்றான்.

வானங்களிலிருந்து மழை நீரை இறக்கி, அதன் மூலம் இறந்து கிடந்த பூமியை புற்களாலும், செடிகளாலும் உயிர்ப்பிக்கச்செய்கின்றோம். ஆடு மாடு விலங்கினங்களிலும், உங்களுக்கு படிப்பினை உண்டு. ஏனெனில் அவற்றில் உங்களுக்கு (பால்) குடிப்பும் உண்டு. கனி வர்ககங்களை தரக் கூடிய பேரீச்சை, திராட்சை, ஸைத்தூன் இன்னும் பலவகைக் கனிகளிலிருந்து அவன் உங்களுக்காக முளைப்பிக்கச் செய்கின்றான். இன்னும் இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். (அவ்வாறே) நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன. நிச்சயமாக இதிலும், நினைவு கூறக் கூடிய கூட்டத்தாருக்கு (தகுந்த) அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருமறைக்குர்ஆன்).

ஆக, இத்தனை வாழ்வாதாரமும் மனிதன் என்ற தன் உயர் படைப்புக்காக, இறைவன் ஏற்படுத்தி இருக்கும் ஏற்பாடுகள் ஆகும். மனிதனோ அவற்றைத் தன் பயன்பாட்டில் கொண்டு வருவதற்குரிய முயற்சிகளைச் செய்யத் தவறி, அதன் பொறுப்புகளிலிருந்து தவிர்ந்து தான், நான் என்ற சுயநல மனிதனாக வாழ ஆசைப்பட்டதன் விளைவு தான் இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களும், அதன் மூலம் எழுந்த பிரச்னைகளும் ஆகும். பிரச்னை எனத் தெரிந்த பின்னும் மனிதன் இறை நியதியை தேடிப் பிடித்து தன் வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்கிறானா இல்லையே!! ஏனெனில் அவன் கடைபிடிக்கும் மேற்கத்தியக் கலாச்சாரம் கொள்கைகள் யாவும் பொருளாதார நோக்கு கொண்டவை. அங்கே மனிதனது மனத்தைத் திருத்தும் ஆன்மீகத்திற்கு வேலை கிடையாது. முனிதனின் வாழ்வு முழமையடைய வேண்டுமெனில், அங்கே அவனது வாழ்வில் ஆன்மீகம் நிலைபெற்றிருக்க வேண்டும். அந்த ஆன்மீகம் இஸ்லாத்தின்பாற்பட்டதான இருந்து விட்டால், அவன் இவ்வுலகில் முழு திருப்தி பெறுவதோடு, இறப்பிற்குப் பின் உள்ள மறுமையிலும் வெற்றியடையும்நிலைக்கு உயர்த்தப்பட்டு விடுகின்றான்.

மேலும், இஸ்லாமிய அமைப்பில் ஜகாத் என்ற சமுதாய வரி, வசதி படைத்த அனைவர் மீதும் கடமையானதொன்றாக இருந்து வருகின்றது. இதனால் பொருளாதாரம இன்றி அல்லல்படும் ஏழைகளும், முதியோர்களும், நோயாளிகளும் உதவி பெறுவர்.

மேலும், பொருளாதார பயத்தால் மழலைகளைக் குறைக்க வேண்டிய அவசியமும் இத்தகு நிலை கொண்ட சமுதாயத்திற்குக் கிடையாது. ஏனெனில், தந்தையால் இயலாத நிலையில், குழந்தைகளுக்கான பொறுப்பு அரசின் மீது சார்ந்து விடுகின்றது. அக்குழந்தைக்கான உணவு, இருப்பிடம், கல்வி, மருத்துவம் போன்ற அனைத்தும் அரசால் அத்தகைய ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்ற உத்தரவாதமும் இருக்கின்றது.

நமது நாட்டில் பிரதமர், முதல்வர் நிவாரண நிதி உண்டே எனலாம். புhரளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு செலவு செய்யப்படும் அதே அளவு உதவி, சாதாரண அடித்தட்டு மக்களுக்கு செய்யப்படுகின்றதா? இல்லையே!!

ஆக, பொருளாதார பயத்தால் மழலைகளைக் குறைப்பது என்பது, இறைவனது அருட்கொடையில் சந்தேகம் கொண்ட நிலையைத் தான் தோற்றுவிக்கும். அத்தகைய பொருளாதாரப் பயம் இஸ்லாம் அல்லாத சமூகத்தில் தான் ஏற்படும். ஏனெனில் அங்கே சமுதாய அமைப்பு என்பது இஸ்லாத்தின் கொள்கையின்பால் கட்டப்படவில்லை. உலகாதாய அடிப்படையில் அமைந்த கொள்கையின் பால் அமைந்ததாகும். ஏனவே தான் இத்தகைய சமுதாயங்கள் தம் வாழ்வில் சீரழிவை மட்டுமே நித்தம் நித்தம் சந்தித்துக் கொண்டு, நிம்மதியை இழந்து தவிக்கின்றன.

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்