Thursday, September 24, 2009

ஷவ்வால் ஆறு நோன்பு வைப்பதன் முக்கியத்துவம்

ஷவ்வால் ஆறு நோன்பு வைப்பதன் முக்கியத்துவம்

அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:

யார் ஒருவர் ரமளான் மாதத்து நோன்பை நோற்று பின் (ஷவ்வால் மாதத்தின்) 6 நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ, அவர் (வருடம் முழுவதும்) தொடர்ந்து நோற்றவர் போலாவார். (முஸ்லிம்)

அல்லாஹ் ரமளான் மாதத்தில் தன்னுடைய அடியார்களின் நல்லமல்களுக்கு ஒன்றுக்கு பத்து என்ற வீதத்தில் கூலி வழங்குகின்றான். எனவே, ரமளான் மாதத்து 30 நோன்பிற்குக் கூலியாக 300 நாட்கள் நோன்பு நோற்ற நன்மையும், அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் வைக்கவிருக்கின்ற 6 நோன்புக்கு 60 நாட்கள் நோன்பு நோற்ற நன்மையும் கிடைக்கச் செய்கின்றான். ஆக ரமளான் மாதத்துடன், ஷவ்வால் மாதத்தின் 6 நோன்புகளையும் நோற்பதால், ஒரு முஸ்லிமிற்கு 360 நாட்கள், அதாவது ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்ற பாக்கியம் கிடைக்கின்றது. இதனை விடச் சிறந்த பாக்கியம் வேறெதுவும் உண்டா? எனவே, இத்தனை சிறப்புக்கள் பொருந்திய ஷவ்வால் 6 நோன்பைத் தவற விடுவது நல்லடியார்களுக்கு நல்லதல்ல.

எவ்வாறு இந்த 6 நோன்புகளை வைப்பது:

இந்த ஆறு நோன்புகளை ஈதுப் பெருநாள் முடிந்ததன் மறுநாளிலிருந்து துவங்கி, தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நோன்பிருக்க வேண்டும் என்பது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களது கருத்தாகும்.

ஷவ்வால் மாதத்தின் ஏனைய நாட்களில், அந்த மாதம் முடிவடைவதற்குள் பிரித்து பிரித்துக் கூட 6 நோன்பையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று இமாம் அபூஹனிஃபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே, இவற்றில் எது தங்களுக்கு இயலுமோ அந்த வகையில் ஷவ்வால் 6 நோன்பை நோற்பது சிறந்தது. பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி, ஈதுப் பெருநாளைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக ஆறு நோன்பு நோற்பதே சிறந்தது என்கிறார்கள்.

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்