Friday, March 12, 2010

பாவங்களின் தாயகம் கிப்ர்

பாவங்கில் மிகவும் கொடியது, கிப்ர் என்ற தற்பெருமையே. ஒருவனது உள்ளத்தில் ஓர் அணுவளவேனும் கிப்ர் இருக்கும் வரை அவன் சுவனத்தில் நுழைய முடியாது என்று எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.

யாரும் பெருமையை விரும்ப மாட்டார்கள். அடுத்தவர்களிடத்தில், தன்னைத் தானே பீற்றிக் கொள்பவனை,பெருமை பேசித் திரிபவனை நாம் விரும்புவதில்லை. அடுத்தவர்களைக் குறை கூறுபவனை, மிகுந்த தற்பெருமை கொண்டவனை நாம் வெறுப்போம்.

அதே போல் தன்னைத் தாழ்த்திக் கொள்கிற அடக்கமான, இனிமையான, எளிதில் அணுகிப் பேசக் கூடிய எந்த நபரையும் நமக்குப் பிடிக்கும். நாம் அத்தகையவர்களை மிகவும் விரும்புவோம். பிறருக்கு மரியாதை கொடுப்பவரை, பிறரைக் கண்ணிப்படுத்துகிறவரை நாம் விரும்புவோம்.

நாம் எவ்வாறு பிறரால் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதே மாதிரி நாம பிறரிடம் நடந்து கொண்டால் பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து போகும். பாவங்களின் தாயகமான கிப்ர் என்ற தற்பெருமை குறித்து நாம் கவலையோடு சிந்திப்பதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.

இதற்கு நாம் அதப் என்ற இங்கிதத்திற்கும், அஃலாக் என்ற ஒழுக்கப் பண்புகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் காண்பது நலம் பயக்கும். அதப் ஒருவரது வெளிப்படையான செயல்களைக் குறித்து நிற்கிறது. மாறாக, அஃலாக் நமது உள்ளத்தில் ஊறுகின்ற உணர்வுகளைக் குறித்து நிற்கிறது. இது இஸ்லாம் வடித்துத் தந்த வரையறையாகும்.

நல்ல ஆரோக்கியமான, சராசரி ஆளுமையுள்ள மனிதனிடத்தில் இந்த இங்கிதங்களும், ஒழுக்கப் பண்புகளும் நீக்கமற நிறைந்திருக்கும். ஒழுக்கப் பண்புகள் இல்லாமலேயே ஒருவர் நல்ல இங்கிதங்களைக் கைக் கொள்ளலாம்.

இதில் முதலில் கவனிக்கப்பட வேண்டியது ஒரு மனிதர் பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது. அடுத்து கவனிக்கப்பட வேண்டியது அந்த மனிதர் தனக்குள் என்ன நினைக்கிறார் என்பது. இரண்டு நபர்கள் பிறரிடம் நடந்து கொள்ளும் விதத்தில் அடக்கத்தையும், பணிவையும் காட்டுகிறார்கள். ஆனால் அந்த இரண்டு நபர்களும் எதிரெதிர் எண்ணங்களைக் கொண்டிருக்கலாம்.

ஒருவர் அவரது தாராளத்தன்மையினால் இப்படி பிறரிடம் பணிவாக நடந்திருக்கலாம். இன்னொருவர் அடுத்தவர்களை விட தான் எந்தவிதத்திலும் சிறந்தவர் இல்லை என்ற எண்ணத்தில் இவ்வாறு நடந்திருக்கலாம்.

முதல் நபர் தாழ்மை என்ற தோலைப் போர்த்தியிருக்கிறார். ஆனால் சோதனை என்று வரும் பொழுது அந்தத் தோல் உரிந்து விடும். இரண்டாவது நபரிடம் தான் உண்மையிலேயே பெருமை என்ற அரக்கன் ஒளிந்து இருக்கவில்லை.

பெருமைகள் அனைத்தும் அந்த வல்லோன் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவன் தான் இந்த உலகைப் படைத்தான். அவன் தான் இந்த உலகைப் பரிபாலித்து வரும் நாயன். மனிதப் பிறவிகள் அனைத்தும் அவனது படைப்புகளே. கற்பனைக்கெட்டாத இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மனிதப் படைப்பு ஒரு கொசுவை விட அற்பமே! இந்த உண்மையை உளமாறப் புரிந்து கொண்ட ஒருவன் நாம் அந்த மகா சக்தி படைத்த அல்லாஹ்வின் அடிமை என்பதை உணர்ந்து கொள்வான்.

ஓர் உண்மையான முஸ்லிமுக்கு முன் மாதிரி இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யார் இருக்க முடியும்? அவர்கள் தான் இந்த உலகிலுள்ள மனிதப் படைப்புகளிலேயே மிகச் சிறந்த படைப்பாவார்கள். அவர்கள் தான் அல்லாஹ்வை அடிபணிவதில் இந்த உலகிலேயே முதன்மையானவர்கள்.

அவர்கள் எந்த அளவுக்கு அல்லாஹ்வை அடிபணிந்தார்களோ அந்த அளவுக்கு உயர்ந்து நின்றார்கள். வேறு எந்த மனிதனாலும் அவர்கள் அளவுக்கு அல்லாஹ்வை அடிபணிய முடியாது. அவர்கள் கிப்ர் என்ற தற்பெருமை குறித்து கீழ்க்கண்டவாறு கூறினார்கள் :

கிப்ர் என்பது அறிந்து கொண்டே சத்தியத்தை மறுப்பது, அடுத்தவர்களைக் குறைத்து மதிப்பிடுவது.

இந்த நபிமொழி இரண்டு கொடிய விஷயங்களை நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த இரண்டுமே தனக்குத் தானே முக்கியத்துவம் கொடுக்கும் தன்மையிலிருந்து பிறப்பதாகும்.

முதலாவது, சத்தியத்தை விட தான் முக்கியம் என்ற எண்ணம். இரண்டாவது – பிற மனிதர்களை விட தான் முக்கியம் என்ற எண்ணம்.

அன்றைய அரேபியாவின் குறைஷிகளும், யூதர்களும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை உண்மையான இறைத்தூதர் என்று நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆனால் அவர்களிடமிருந்த பெருமைதான் அவர்களை சத்திய இஸ்லாத்தை ஏற்பதிலிருந்து தடுத்து நிறுத்தியது.

அவர்களில் சிலர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தான் வாக்களிக்கப்பட்ட இறைத்தூதர் என்று தங்கள் வாய்களாலேயே ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இருந்தும் அவர்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களைக் கண்மூடித்தனமாக எதிர்த்தார்கள்.

இதுதான் பெருமையிலேயே மிகக் கொடிய பெருமையாகும்.

ஆனால் இந்தப் பெருமையின் சிறிய அம்சங்கள் நமது அன்றாட வாழ்விலும் எதிரொலிக்கின்றது. நமது கலந்துரையாடல்களில், விவாதங்களில் நாம் இதகை; காண்கிறோம்.

ஒரு நபருக்கு அவர் பேசுவது தவறு என்று புரியும். இருந்தும் அவர் அதனை விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டிருப்பார். இது அவரிடம் ஒளிந்து இருக்கும் பெருமையால் தான் அல்லாமல் வேறு இல்லை.

அந்த நபர் எவ்வளவு அமைதியானவராக, அடக்கமானவராக இருந்தாலும் இந்தச் சிறிய சோதனை அவருக்குள் இருக்கும் அந்தப் பெருமை என்ற அரக்கனை வெளிக்காட்டிடும். இந்தப் பெருமை என்ற அரக்கன் தான் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதிலுமிருந்தும் ஒரு மனிதனைத் தடுக்கிறது.

இரண்டாவது அம்சம் என்னவெனில் நம்முள் இருக்கும் மேலாதிக்க உணர்வு, பிறரை விட தான் உயர்ந்தவன் என்ற உணர்வு. ஒரு மனிதர் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவரை விட தான் உயர்ந்தவர் என்று எண்ணி விடக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

யார் யாரை விட உயர்ந்தவர் என்பதை அல்லாஹ் ஒருவனே அறிந்தவன். அனைவரும் ஒன்று கூடும் அந்தத் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அதனை அறிவிப்பான். நாம் வெற்றி பெறுவோமா, தோல்வி அடைவோமா என்று யாருக்கும் தெரியாது. இந்த உலகில் ஒரு மனிதர் இருக்கும் இடமே தெரியாமல் இருந்திருப்பார். அவரை யாரும் கண்டு கொள்ளவும் மாட்டார்கள். அந்த மனிதர் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும் அந்த அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

நியாயத் தீர்ப்பு நாளில் அவர் அல்லாஹ்விடம் மிகுந்த கண்ணியத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்பார். இந்த உலகில் மிகுந்த நற்பெயர் வாங்கி நல்ல மனிதராக உலா வந்தவர் அங்கு பாவிகளில் ஒருவராக இருக்கலாம். ஏனெனில் அவர் செய்த பாவகாரியங்கள் அனைத்தும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும்.

இது தான் ஒவ்வொரு மனிதனின் நிலையும். இப்படியிருக்க பிறரை விட தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் ஒரு மனிதனை விட முட்டாள் இருக்க முடியுமா? நமது உடல் ஆரோக்கியம், நமது செல்வங்கள், நமக்கிருக்கும் திறமைகள், நமக்கிருக்கும் அதிகாரங்கள், இவையனைத்தும் அல்லாஹ் நமக்குக் கொடுத்தது. இவை நம்மால் வந்தவையல்ல.

அல்லாஹ் இவைகளை நமக்கு ஒரு சோதனைக்காகக் கொடுத்திருக்கின்றான். அவன் விரும்பினால் இவைகளை அவன் திரும்பப் பெற்றுக் கொள்வான். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் அல்லாஹ்வுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்திக் கொண்டு அடக்கமாக வாழ்வார்கள்.

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாத குருடர்கள் பெருமை என்ற அரக்கனைத் தங்களுக்குள் வளர்த்துக் கொள்வார்கள்.

கிப்ரின் சில தன்மைகள் வெளியில் தெரியாமல் மறைந்து இருக்கின்றன. ஒருமனிதன் முஸ்லிமல்லாதவர்களின் முன்னிலையில் அல்லாஹ்வுக்குத் தலைவணங்கத் தயங்குவானேயானால், அவனிடம் அல்லாஹ்வின் முன்னிலையிலுள்ள கிப்ர் இரு;கின்றது என்று பொருள் என்று மௌலான அஷ்ரஃப் அலீ தானவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அடக்கம் என்பது தேவைதான். ஆனால் அதுவே தாழ்வுமனப்பான்மையாக மாறி விடக் கூடாது. தாழ்வுமனப்பான்மை என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் ஆட்லர் (1870-1937).

வாழ்க்கை என்பது ஒரு போராட்டக் களம். அதில் தாழ்மையான ஒரு நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு தன்னை அழைத்துச் செல்ல போராடுகின்றான் மனிதன். இந்தப் போராட்டத்தில் யார் தோல்வி அடைகின்றாரோ அவர் தன்னுள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்.

தாழ்வுமனப்பான்மையை ஒரு முஸ்லிம் விட்டொழிக்க வேண்டும். மாறாக, தன்னை அல்லாஹ்வின் அடியான் என்ற வகையில் தாழ்த்திக் கொண்டு, அடக்கமாக நடந்து கொள்வதே ஒரு முஸ்லிமுக்கு அழகு.


நன்றி : Impact International, London, July 99.
- தமிழில் : MSAH

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்