Monday, February 8, 2010

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்வில்..,

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்வில்..,

புன்னகை செய்யும் மாயம்


புன்னகை என்பதில் வசீகரம் உள்ளது. புன்னகை சில வேளைகளில் சாதனைகளைக் கூட நிகழ்த்தி விடுகின்றது. இன்னும் நோய்க்கு மருந்தாகவும் ஆகி விடுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் புன்னகை தவழும் முகத்துடனேயே இருப்பார்கள். புன்னகை தவழும் முகத்துடன் இருப்பவர்களுக்கு, சமூகத்தில் மக்களுடன் நல்ல உறவு இருந்து கொண்டிருக்கும். இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்வில் எந்தத் தருணங்களில், தனது தோழர்களுடன் புன்னகையோடு உறவாடி இருக்கின்றார்கள் என்பதைக் காண்பது நல்லது.

புன்னகை பூத்த முகத்துடன் இருப்பது, செய்திகளை மிக எளிதாகச் சொல்வதற்கும், இன்னும் சூழ்நிலைகளின் இறுக்கத்தை குறைப்பதற்கும் உதவுகின்றது. இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது வாழ்வின் ஏராளமான தருணங்களில் கடைபிடித்தவர்களாக இருந்தார்கள்.

ஜரீர் பின் அப்துல்லா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

''நான் இஸ்லாத்தை தழுவியதிலிருந்த நான் நபியவர்களைச் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறுவிதமாக அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.''

இதைக் கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.

''என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை'' என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப் பெற்றவராகவும் ஆக்குவாயாக'' என்று பிரார்த்தனை செய்தார்கள். (புகாரீ, முஸ்லிம், அஹ்மத், அத்திர்மிதீ மற்றும் இப்னு மாஜா)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதுமே தன்னுடைய தோழர்களுடன் மிக எளிமையான அளவில் உறவு கொண்டிருந்ததைப் பார்க்க முடிகின்றது, எப்பொழுதெல்லாம் தனது தோழர்கள் தன்னைச் சந்திக்க வருகின்றார்களோ, அப்பொழுதெல்லாம் அவர்களை புன்னகை தவழும் இன்முகத்துடன் வரவேற்றுப் பேசி இருப்பதை மேற்காணும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

மேற்கண்ட நபிமொழியை அறிவிக்கக் கூடியவர் கூறுவதைப் பாருங்கள், எப்பொழுதெல்லாம் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்க அனுமதி கோரினேனோ அப்பொழுதெல்லாம் அவர்கள் என்னைச் சந்திக்க அனுமதித்திருக்கின்றார்கள், என்னை அவர்கள் சந்திக்காது திருப்பி அனுப்பியதே இல்லை என்றும் கூறுவதைக் காணுகின்றோம். அரபுகளுக்கு மத்தியில் இப்படியொரு பழக்கம் இருந்தது, இன்னும் அவர் தலைவராக இருக்கும்பட்சத்தில் தன்னைச் சந்திக்க வருகின்றவர்களைக் காக்க வைப்பது என்பது அவர்களுக்கொரு பெருமைமிக்க செயலாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்தவரான இறைத்தூதர் (ஸல்) அவர்களோ, தன்னைச் சந்திக்க வருகின்ற தோழர்கள் மார்க்கமல்லாத விஷயங்களைப் பேச வந்த போதிலும் கூட, அவர்களைச் சந்திக்காது திருப்பி அனுப்பியதில்லை.

ஜரீர் (ரலி) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.., தன்னால் குதிரையில் அமர்ந்து பயணிக்க முடியவில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முறையிடுகின்றார். தனது தோழர்களின் வாழ்வில், அவர்களது நலன்களில் எப்பொழுதுமே கவனமாக இருக்கக் கூடியவரான இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தன்னிடம் முறையிட்ட அந்தத் தோழருக்காக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்தைப் பார்க்கின்றோம். எப்பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய இறைவனிடம் கையேந்திப் பிரார்த்திக்கின்றார்களோ, குறிப்பாக யாருக்காக அந்தப் பிரார்த்தனையைச் செய்தார்களோ அத்தகைய நபர் அபரிதமான அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவராக இருப்பார். இது விஷயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழரான ஜரீர் அவர்களுக்கு பிரார்த்தனை செய்தார்கள், அதன் மூலம் அவர் தனது பிரச்னைக்கான தீர்வைப் பெற்றுக் கொண்டார், இன்னும் பிறருக்கு முன்மாதிரியானவராகவும் இருந்தார். அதன் மூலம் ஈருலக நன்மைகளைப் பெற்றுக் கொண்டதைப் பார்க்க முடிகின்றது.

மேலும், இந்த நபிமொழியில் தன்னைச் சந்திக்க வந்த தோழரை இன்முகத்துடன் சந்தித்திருப்பதைக் காண முடிகின்றது. அதன் மூலம் சந்திக்க வந்த நபரின் உள்ளத்தை இளக வைக்க முடிந்தது, சூழ்நிலையின் இறுக்கத்தை தணிக்க முடிந்தது.

சில முக்கியமான சந்தர்ப்பங்களில் புன்னகையையும் தாண்டிக் கூட, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு சிரிப்பு வந்து விடும். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், ஹுனைன் யுத்தம் முடிந்திருந்த சமயம்..., உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் தனது கையில் ஒரு வாளை ஏந்திக் கொண்டு வருவதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டு, இதனை ஏன் கையில் ஏந்திக் கொண்டு செல்கின்றீர்கள் என்று வினவுகின்றார்கள். அதற்கு, என்னருகில் எந்த நிராகரிப்பாளராவது வருவாராகில், அவரது குடலைக் குத்தி எடுக்கத் தான் என்றார்கள். இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. பின்னர், நம்முடன் இருந்து கொண்டே ஹுனைன் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் நம்மை விட்டு விட்டு ஓடிய அந்த 'அல்துலக்கா' என்பவர்களைக் கொலை செய்து விடுங்கள் என்றும் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ, உம்மு ஸுலைம் அவர்களே.., நமக்குத் தேவையானதை விடவும், அதனைக் காட்டிலும் இறைவன் நமக்குக் கொடுத்து விட்டானே' (அதுவே நமக்குப் போதுமானதாகும்) என்று பதில் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தூதராகவும், தேசத்தின் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் ஒரே நேரத்தில் கடமையாற்றி வந்தார்கள். அப்படி இருந்தும் கூட, அவ்வளவு பரபரப்பான நேரத்திலும் கூட, தனது தோழர்களில் ஒவ்வொருவரது நடவடிக்கையையும் கூர்ந்து கவனிப்பவர்களாக இருந்தார்கள். அதனைத் தான் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களது சம்பவத்தில் பார்த்தோம். போர் என்று வந்து விட்டால், அதில் பெண்களும் ஆண்களுடன் இணைந்து செல்வார்கள், ஆண்கள் போரிட பெண்களோ காயம்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் சில அசாதரணமாக சந்தர்ப்பங்களில் பெண்களும் கூட போரில் கலந்து கொள்வதுண்டு. குறிப்பாக போரின் போக்கு முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமாக இருக்கும் சந்தர்ப்பங்களில்.., பெண்களும் கூட ஆயுதம் ஏந்திப் போர் புரியக் கூடியவர்களாக இருந்தார்கள். குறிப்பாக அதனை உஹத் மற்றும் ஹுனைன் போர் வரலாறுகளில் காணலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுக்குமிடையே நடைபெற்ற இந்த உரையாடல் ஹுனைன் யுத்தம் நடைபெற்று முடிந்ததன் பின்னர் நிகழ்ந்ததாகும். இதனை.., அவர்களது உரையாடல்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம், போரில் நம்மை விட்டு விட்டு ஓடி விட்டவர்களைக் கொலை செய்து விடுங்கள் என்று ஆலோசனை கூறும் அவர்களது உரையாடல் போக்கிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களின் தரப்பில் அதிகமான எண்ணிக்கையினாலான படைவீரர்கள் இருந்ததன் காரணமாக, நம்மை யார் தான் வெற்றி கொண்டு விட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்த பொழுது, திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்காததால் போரின் ஆரம்பக் கட்டத்தில் முஸ்லிம்கள் அதிக இழப்புகளுக்கு உள்ளானார்கள். முஸ்லிம்களின் தரப்பில் குழப்பம் மிகைத்தது. இருப்பினும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இணைந்திருந்த சிறிய குழுவினர் மிகவும் உறுதியாக இருந்தார்கள். இந்த நிலையில் உம்மு ஸுலைம் மற்றும் ஏனைய சில நபித்தோழியர்கள் இனி ஆயுதத்தை நாமும் ஏந்த வேண்டியது தான் என்ற நிலைக்கு வந்தார்கள். அதன்படியே, தன்னை எதிர்கொள்ள யாராவது எதிரிகள் வந்தால், அவர்களது வயிற்றைக் குத்திக் கிழிக்கவே அந்த வாளை ஏந்திக் கொண்டிருந்தார்கள் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள்.

உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் ஆலோசனை கூறிய நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள் என்பதைப் பார்த்தோம், உண்மையில் ஒரு தியாக உள்ளத்தோடு தன்னை இஸ்லாத்திற்காக அற்பணிக்க வந்திருக்கும் ஒருவரது முயற்சியைப் பார்த்துச் சிரிப்பது அவரது உள்ளத்தைப் புண்படுத்தி விடும். ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்களோ, அந்தச் சிரிப்பை பிரச்னைகள் ஓய்ந்து ஓய்வாக இருக்கும் சமயத்தில், அதாவது முஸ்லிம் படைகள் வெற்றி பெற்றதன் பின் நடந்த நிகழ்வில் சிரித்தார்கள். எனவே, சிரிப்பதற்கும் கூட இடம் பொருள் ஏவல் உண்டு. சில சிரிப்பு நன்மையை வரவழைக்கும், நமுட்டுச் சிரிப்பு, நக்கல் சிரிப்போ.., பிரச்னையைத் தான் அதிகரிக்கும்.

உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் தனது தியாகத்தால் இஸ்லாமிய வரலாற்றில் உன்னதமான இடத்தைப் பிடித்திருப்பவர்கள். போரின் நடுவே விட்டு விட்டு ஓடியவர்களை தண்டிக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆலோசனை கூறுகின்றார்கள். இந்த மக்களுக்கு அல் துலக்கா என்று பெயரிடப்பட்டதற்குக் காரணம், மக்கா வெற்றியின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் சரணடைந்தவர்கள் என்பதே காரணமாகும். இஸ்லாத்தை இந்தப் பூமிப் பந்திலிருந்து விரட்டி அடித்து விட வேண்டும் என்று தனியாகவும், பிற குலத்தவர்களுடனும் இணைந்து கொண்டு, இந்த அல் துலக்கா மக்கள் இஸ்லாத்தை எதிர்த்ததோடு.., இஸ்லாத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுத்து வந்தவர்களாவார்கள்.

அவ்வாறு முஸ்லிம்களை எதிர்த்தவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்பாக சராணகதி அடைந்து நின்றிருந்த பொழுது, ''நான் உங்களை என்ன செய்ய நாடுகின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அதற்கு, நீங்கள் கண்ணியமிக்க சகோதரர், கண்ணியமிக்க சகோதரரின் மகனுமாவீர்கள், உங்களிடம் கண்ணியமானதையே எதிர்பார்க்கின்றோம்'' என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ''நீங்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டீர்கள், மன்னிப்பளிக்கப்பட்டு விட்டீர்கள்'' என்றார்கள். 'அல் துலக்கா' என்றழைக்கப்படுவதன் காரணம் என்னவெனில், சுதந்திரமளிக்கப்பட்டவர்கள் என்று பொருளாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்களை களம் காணச் சென்ற பொழுது, போர்ப் பொருட்கள் ஆதாயமாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் போருக்கு இவர்களும் வந்தார்கள். ஆனால், போரோ கடுமையாக இருக்கவும், போர்ப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு வந்தவர்கள் போர்க்களத்தை விட்டே உயிருக்குப் பயந்து ஓடி விட்டார்கள். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களோ.., அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இறைவனுடைய உதவி நமக்கு வந்து விட்டது, எனவே அவர்கள் அந்த மக்களை தண்டிக்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக இறைவனையே முழுமையாகச் சார்ந்திருந்தார்கள், அவன் வழங்கிய வெற்றிக்கு நன்றி செலுத்தினார்கள்.

தன்னுடைய படை இக்கட்டான சந்தர்ப்பத்தில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, படையை விட்டு விட்டு உயிருக்குப் பயந்து ஓடியவர்களை இன்றைய இராணுவச் சட்டங்கள் தண்டிக்காமல் விட்டு விடாது. அத்தகையவர்களை எதிர்காலத்தில் நம்பவும் மாட்டார்கள். நிச்சயமாக அவர்களைப் பிடித்து தண்டிக்காமல் விட மாட்டார்கள். ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்களோ.., அவர்களை மன்னித்தார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று, அதிகமான போர்ப் பொருட்கள் சேர்ந்திருந்த அந்த நேரத்தில், அவற்றில் சிலவற்றை அவ்வாறு ஓடிப் போனவர்களுக்கும் கொடுத்தார்கள். அதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தில் இன்னும் ஸ்திரமாக.., உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இதுவே, மிக நீண்ட காலமாக இஸ்லாத்தை எதிர்த்த மக்களது மனங்களை மாற்றி, இஸ்லாத்தை நேசிக்கக் கூடிய மக்களாக அவர்களை மாற்றியது.

No comments:

Post a Comment

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்