Sunday, May 23, 2010

இஸ்லாமிய பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்கள்

இன்றைக்கு இஸ்லாம் என்பது ஒரு மதமாக உலக மக்களிடையே முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால் எந்த மதத்திற்கும், இயக்கத்திற்கும், அமைப்பிற்கும் இல்லாதொரு பண்பாட்டுக் கொள்கை இஸ்லாத்திடம் இருக்கின்றது. அத்தகைய பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் தான் பிற மதத்தைப் பின்பற்றுபவர்களிடமிருந்து முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. இந்த வேறுபாடு ஒன்றே இன்றைக்கு இஸ்லாத்துடன் மற்ற கொள்கை மக்களைப் பிணைக்கின்ற காரணியாக இருந்து கொண்டிருக்கின்றது.

குர்ஆனை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிக்தால் அவர்கள் இஸ்லாத்தினால் கவரப்பட்டதும், பிரிட்டனின் முதல் தர பாடகராக விளங்கிய கேட் ஸ்டீவன்ஸ் என்பவர் இஸ்லாத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டு யூசுப் இஸ்லாம் என்று மாற்ற வைத்ததும் இந்த இஸ்லாமியப் பண்பாடு தான்.

எனவே, மற்ற மதங்களைப் போல இஸ்லாம் சடங்கு ரீதியான பூஜை, புனஸ்காரங்கள், தீபாராதனைகள், வணக்க வழிபாடுகள் போன்றவற்றை நிறைவேற்றி விட்டால் மட்டும் போதுமென்று சொல்லும் மார்க்கமல்ல, மாறாக, மனிதர்களிடையே பூரணமான ஒழுக்க விழுமங்களை ஏற்படுத்தவே இஸ்லாம் விரும்புகின்றது.

இதையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், மனிதர்களிடையே ஒழுக்கத்தைப் பூரணப்படுத்தவே நான் வந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

அந்த ஒழுக்க விழுமங்களைப் பாழக்கடிக்கச் செய்யும் அத்தனை வழிகளையும் இஸ்லாம் வேரோடு வெட்டிச் சாய்த்து வைத்திருக்கின்றது. அதன் ஆணி வேரை இனங்கண்டு, அதனால் ஏற்படும் தீமைகளையும் இஸ்லாம் மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

தொழுகை என்பது நேரங் குறித்த கடமையாக இருக்கின்றது என்று கூறும் திருமறைக் குர்ஆன், அந்தத் தொழுகை மனிதர்களிடையே எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் அது கோடிட்டுக் காட்டத் தவறவில்லை.

திருமறை கூறுகின்றது :

தொழுகை மானக் கேடான, அருவருக்கத்தக்க காரியங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க வேண்டும் (அல்குர்ஆன்) என்று கூறுகின்றது.

இன்றைக்கு இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளையும் மக்கள் மத்தியிலே எடுத்துரைத்து, இந்தப் பூமிப் பந்தை ஒரு ஆரோக்கியமானதொரு கொள்கைத் தளமாக, அமைதி மற்றும் சாந்தி தவழும் வாழ்விடமாக மாற்றியமைக்க முயற்சிக்கின்ற வேளையிலே, இஸ்லாத்திற்கு எதிராக சக்திகள் அதாவது பண்பாடு, நாகரீகம், ஒழுக்கம் என்பதே அறியாத அந்த சக்திகள் இஸ்லாத்தின் குரல் வளையை நெறித்து விட முயற்சிக்கின்ற இந்த வேளையில், பிரச்சாரப் பணிகள் கூட நாளை தடுத்து நிறுத்தப்படலாம் என்றிருக்கின்ற இந்த சூழ்நிலையில், மௌலான அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்கள், இந்த முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கிச் சென்ற அறிவுரையைக் கருத்தில் கொண்டு இந்தத் தொடரை நாம் ஆரம்பம் செய்கின்றோம்.

அவர்கள் கூறினார்கள், நாளை இந்த இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் அழைப்புப் பணிக்கு தடை போடப்படலாம்..!? அப்படி ஒரு கால கட்டம் வந்தால் இந்த சமூகம் என்ன செய்வதென்று முடங்கிப் போய் நிற்க வேண்டாம்..! உங்களது இஸ்லாமியப் பண்பாட்டின் மூலம், இஸ்லாம் கற்றுத் தந்திருக்கின்ற பண்பாட்டு ஒழுக்க மாண்புகளைப் பேணுவதன் மூலம் நீங்கள் பிற மக்களுக்கு அழைப்புப் பணியைச் செய்யுங்கள். நீங்கள் இஸ்லாத்தைப் பரப்பத் தான் முடியாதே ஒழிய, இஸ்லாமிய பண்பாடுகளைப் பின்பற்றுவதற்கு அதனை உங்கள் சொந்த வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கு யார் தடை கொண்டு வர முடியும்!? அந்த பண்பாட்டுப் பாசறை மூலம் நீங்கள் பிற மக்களுக்கான சாட்சியங்களாகத் திகழலாம்..! இஸ்லாமிய அடையாளங்களாகப் பரிணமிக்கலாம் என்ற கருத்தைக் கூறினார்கள்.

எனவே, சகோதரர்களே! இஸ்லாமியப் பண்பாட்டுப் பாசறைகளாக நம்மையும் நம்முடைய குடும்பத்தையும் மாற்றியமைத்துக் கொள்வதற்கு இந்தத் தொடர் உங்களுக்கு உதவுமானால் அதுவே இந்தத் தொடரின் வெற்றியாகும். இறைவன் நம் அனைவருக்கும் அவனும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த பண்பாட்டின் படி வாழக் கூடிய முஸ்லிம்களாக நம்மை மாற்றிக் கொள்ள உதவி அருள்புரிவானாக! ஆமீன்!!

மர்வான் இப்றாஹீம் அல் கைசி என்பவரது நூலை அடிப்படையாக வைத்து இந்நூல் தயாரிக்கப்படுகின்றது என்பதையும் உங்களுக்கு அறியத் தருகின்றோம். மேலும் ஒவ்வொன்றையும் தனித்தனி கருத்துக்களாக தொகுத்தும், மேலும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்களின் ஒளியில் பெறப்பட்ட கருத்துக்களாகவே அவை அமைந்திருக்கின்றன என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.சமுதாய சக வாழ்வு


--------------------------------------------------------------------------------

சமூக நல்லுறவுகள்இஸ்லாம் காட்டித் தந்திருக்கின்ற இஸ்லாமிய ஒழக்க மாண்புகளை ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்றும் பொழுது, இந்தப் பூமியானது சமுதாய சக வாழ்வின் வாழ்விடமாக மாற்றம் பெறுகின்றது. இந்த சமுதாய சகவாழ்வுக்கு முதலில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு பிறர் மீதுள்ள கடமைகளை மதித்தல், இரண்டாவதாக, தன்னிடம் நல்லதொரு பண்பாட்டுத் தகமைகளை உருவாக்கிக் கொள்ளுதல் மூன்றாவதாக, ஒரு மனிதனிடம் இருக்கக் கூடாத கெட்ட பழக்கவழக்கங்கள் அனைத்திலிருந்தும் தவிர்ந்து கொள்ளுதல் ஆகிய இந்த மூன்று அடிப்படையான விசயங்களை ஒரு மனிதன் கடைபிடிக்க ஆரம்பிக்கும் பொழுது, இந்தப் பூமி சமுதாய சக வாழ்வுக்கான மாற்றத்தைப் பெற ஆரம்பித்து விடுகின்றது.பிற மனிதர்கள் மீது செலுத்த வேண்டிய கடமைகள்

பேச்சு என்பது சமுதாய வாழ்வில் முக்கியமானதொரு பங்கையாற்றுகின்றது மட்டுமல்ல பிற மனிதர்களிடத்தில் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அது உதவுகின்றது. இந்த அதி முக்கியமான தொடர்பு சாதனத்தை நாம் எப்படிக் கையாளுகின்றோம், என்ன வகைக்காக அதனைப் பயன்படுத்துகின்றோம் என்று ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து அதனைச் செயல்படுத்துவது அவசியம்.

நேர்மையான நடப்பதன் மூலம் ஒரு மனிதன் பிற மனிதர்களின் பிரியத்திற்குரியவனாக மாறுகின்றான், இந்த நற்பழக்கம் சமுதாய வாழ்வில் ஒருவரை மற்றவருடன் அன்பு கொண்டு பிணைப்பதற்கு உதவுகின்றது. சமுதாயக் கூட்டறைவை வளர்க்கின்றது. இந்தப் பழக்கம் ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்பாகும்.

இரு மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக முகப் பாவனைகளை வெளிப்படுத்துவது. இந்த முகப் பாவனை வெளிப்பாடு ஒருவர் மற்றவரை நல்ல முறையில் புரிந்து கொள்வதற்கும் இன்னும் அதை விட பிற மனிதர்கள் மீதுள்ள கடமைகளை மதித்த பண்பாட்டுக்கும் அது வழியமைக்கும்.

ஒரு முஸ்லிம் இன்னொரு நபருடைய செய்முறைகள் மூலம் அவரைப் பற்றித் தீர்மானிக்க வேண்டும். தன்னை எந்தளவு பிறர் மதித்து நடத்தினார்களோ, அதைப் போலவே அவரையும் மதித்து நடப்பது அவசியம். ஒவ்வொரு மனிதரது உள்ளத்தின் ஆழத்தில் என்ன ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை யாரும் அறிய இயலாது – அவர்களை அல்லாஹ் தான் மிக அறிந்தவன். உங்கள் மீது தீமைகளைப் புரிந்து விடுவதற்கு எண்ணங் கொள்ளக் கூடிய ஒருவரை நீங்கள் என்றும் நம்பி விடாதீர்கள், அவர் உங்கள் மீது நல்லபிப்பராயம் கொண்டிருந்தாலும் சரியே! உங்கள் மீது எனக்கு நல்ல நோக்கம் இருக்கின்றது என்று வெளிப்படையாக அவர் அறிவித்தாலும் சரியே! இத்தகைய நபர்களை உங்களது உற்ற நம்பிக்கையாளராக ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

ஒரு மனிதன் அடுத்த மனிதனிடத்தில் உறவுகளை வளர்த்துக் கொள்வது என்பது, அவனுடன் ஏற்படுகின்ற மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

ஒரு முஸ்லிம் பிற மனிதர்களிடத்தில் வாக்குறுதி வழங்குவதற்கு முன், அதனை நிறைவேற்றுவதற்கு தன்னால் இயலுமா என்பதை உறுதி செய்து கொண்ட பின்பே வாக்குறுதிகளை வழங்க வேண்டும். வாக்குறுதிகளை வழங்கிய பின்பு, அதனை எக்காரணம் கொண்டும் அதனை முறித்து விட முயற்சி செய்யக் கூடாது. வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது என்பதை அறிந்து, அவர் மன்னித்து விட்டாலே ஒழிய வாக்குறுதி கொடுத்தவரின் பிரச்னை முடிவுக்கு வந்து விடாது என்பதும், இது இருவருக்குமிடையே ஒரு கெட்டதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்பதையும் வாக்குறுதி கொடுக்கக் கூடியவர் உணர்ந்து, வாக்குறுதி கொடுப்பதற்கு முன் இது பற்றி சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.

ஒரு சமயத்தில் பல நபர்களுக்கு வாக்குறுதி வழங்குவது என்பதும் மோசமான நடத்தையாகும். பல நபர்களுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயலும் போது, யாராவது ஒருவருடைய வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமலேயே போய் விடச் சந்தர்ப்பமும் இருக்கின்றது என்பதை அறிந்து செயலாற்ற வேண்டும்.

பிற மக்களின் மீது தனக்குள்ள கடமைப்பாடுகள் என்ன என்று சிந்திக்கக் கூடிய ஒருவர், முதலில் நோய் வாய்ப்பட்ட சகோதரரை சந்திப்பதையும் இன்னும் இறந்த சகோதரரின் மரண அடக்க நிகழச்சிகள் போன்றவற்றில் கலந்து கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ, அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார் (ஹதீஸ்). தனக்கு நன்மை செய்த மனிதனுக்கு முதலில் நன்றி தெரிவிப்பது என்பது ஒரு மனிதனுக்கு பிற மனிதர்கள் மீதுள்ள கடமைகளில் முக்கியமானதாகும். நன்றி செய்தவருக்கு,

ஜஸக்கல்லாஹு கைரன் (அல்லாஹ் உனக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று கூற வேண்டியது அவசியமாகும்.

தேவையுடையவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினுடைய கடமையாகும். இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காத, தவிர்ந்து கொள்ள வேண்டியவற்றை அவர் உதவியாகக் கோரினாலன்றி, இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற வகைகளுக்கு உட்பட்டு நாம் பிற மக்களுக்கு உதவ வேண்டியது அவசியமாகும். ஒருவர் தேவையின் நிமித்தம் உதவியைக் கோரிய பின்பும், அந்த உதவியைச் செய்வதற்கு எந்த விதத்திலும் தயங்கி நிற்பது கூடாது.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு அழைப்புக் கொடுக்கும் பொழுது, குறிப்பாக திருமண விருந்து போன்றவற்றிற்கு அழைக்கும் பொழுது, அந்த விருந்தினை ஏற்று செல்ல வேண்டுமே ஒழிய, அந்த அழைப்பை உதாசிணம் செய்து விடக் கூடாது.

இன்னும் குறிப்பாக தன்னுடைய உடையிலிருந்தும், தன் மேனியிலிருந்தும், வாயிலிருந்தும் (சிகிரெட், வெங்காயம், பூண்டு முதலியவற்றிலிருந்து) வெளியாகும் கெட்ட துர்வாடையின் காரணமாக பிற மனிதர்களை சங்கடத்திற்குள்ளாக்குதல் கூடாது.

அடிப்படையாக இருக்க வேண்டிய தனிநபர் குணநலன்கள்

பொதுவாகக் கூற வேண்டுமென்றால் நல்ல குணநலன்களை விட மிகச் சிறந்தது எதுவுமில்லை. மக்களில் சிறந்தவர்கள் யார் என்றால், நல்ல குணநலன்களைக் கொண்டவர்களே, மக்களின் மிகக் கெட்டவர்கள் யார் என்றால், கெட்ட குணநலன்களைக் கொண்டவர்களே! இங்கே நாம் தரக் கூடிய ஒவ்வொரு வழிமுறைகளும் முஸ்லிம்கள் அனைவரும் நன்றாகச் சிந்தித்துக் கடைபிடிக்க வேண்டியதொரு அம்சங்களாகும்.

பிறரிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள், அகம்பாவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களை நிறைவேற்றுங்கள்.

எப்பொழுதும் உண்மையே பேசுங்கள், நீங்கள் எதனைப் பேசுகின்றீர்களோ அதன்படியே நடக்கவும் செய்யுங்கள்.

முஸ்லிமாக இருப்பினும் அல்லது முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் சரியே..! பிறரிடம் கருணை காட்டுபவராக இருங்கள்.

தேவையுடயவர்களுக்கு உதவுபவராகவும், சங்கடங்களில் உழல்பவர்களுக்கு உதவிக்கரம் வழங்குபவராகவும், இன்னும் சொல்லப்போனால், அவர் உங்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்காத நிலையிலும் கூட, உதவி தேவைப்படுபவர்களைச் சந்தித்து உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிறர் செய்யும் குற்றங் குறைகளை மன்னிக்கும் நிலையில் அதிகாரம் மற்றும் ஆட்சி கைவரப்பெற்றவராக நீங்கள் இருப்பின், உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் செய்யும் குற்றங் குறைகளை மன்னித்து விடுங்கள்.

பிறரது நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பிறரிடம் நல்ல நட்புக்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், அவர்களது நட்பை நல்லவிதமாக மதித்து நடந்து கொள்ளுங்கள்.

பிறர் உங்களிடம் ஆலோசனை கேட்டு வந்தால், சரியான முறையில் ஆலோசனைகளை வழங்குங்கள்.

அவருக்குச் சம்பந்தமில்லாதவற்றை அல்லது தொடர்பில்லாதவற்றைக் குறித்து அவரிடம் பேசாது, அவரை விட்டு விடுங்கள்.

தேவை அல்லது அவசரம் ஆகிய அத்திவாசிய நோக்கமின்றி எதனையும், எதையும் யாரிடமும் கேட்டுப் பெறாதீர்கள்.

ஒருவருக்கு வாக்குறுதி கொடுத்தால், உங்கள் வருகை குறித்து இருந்தாலும் சரி அதனை குறித்த நேரத்தில் நிறைவேற்றுங்கள்.

சந்திப்பதற்கான நேரங் குறித்து வாக்குறுதி அளித்திருந்தால், அதனையும் நிறைவேற்றுங்கள்.

பிறரது கோபம் மற்றும் எதிர் வினைகளிலிருந்தும் நீங்கள் தவிர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, அதனைப் பின்பற்றுவதிலே தனிக் கவனம் எடுத்துச் செயல்படுகின்றவர்களுடன், உங்களது உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

எப்பொழுதும் பொறுமையுடன் இருங்கள்.

உங்களிடம் யார் வம்பிழுத்து வலுச்சண்டைக்கு வந்தார்களோ, அவர்களுக்கு ஸலாத்தினைத் தெரிவியுங்கள்.

அத்தகையவரது குடும்பம் மற்றும் உறவுகளின் நலன் குறித்து தான் மிகவும் அக்கறை கொண்டவனாக இருக்கின்றேன் என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.

வெட்கமுடையவராக இருங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகள் குறித்து திருப்தி கொண்டவராக இருங்கள்.

பிரச்னைக்குரிய விசயங்களை தூர எறிந்து விட்டு, அதி முக்கியமான விசயங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்.

தீயோர்களுடன் நடந்து கொள்ளும் பொழுது நீதி நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கிடையில் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொண்டு, உறவுப் பாலத்தை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்மையானவற்றைச் செய்ய நாடுகின்றவர்களுக்கு, அதற்கான வழிகளைக் காட்டிக் கொடுங்கள்.

மனமுடைந்து போன இருவரிடையே நீதியுடன் சமாதானம் செய்து வையுங்கள்.

செயல்பாடுகளின் பின்விளைவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யுங்கள்.

பிறரிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

பிறர் உங்களிடம் ரகசியமாக இருக்கட்டும் என்று கூறி வைத்தவற்றையும், இன்னும் பிறரைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்ட ரகசியங்களையும் எப்பொழுதும், பாதுகாப்பாகவே வையுங்கள். அவற்றைப் பிறரிடம் கூறி பிறரது அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி விடாதீர்கள்.

முஸ்லிம்களுடைய கண்ணியத்தைக் குலைக்கக் கூடிய காரியத்தை செய்து விட்ட முஸ்லிம் சகோதரருக்காக, அவர் செய்து விட்ட அந்த தவறுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்.

உங்களுக்குத் தீங்கிழைத்தவர்களுக்கு தீங்கையே செய்து விடாமல், உங்களது உற்ற நண்பர்களை எப்படி மன்னிப்பீர்களோ அவ்வாறே அவரையும் மன்னியுங்கள்.

பிறரைச் சந்திக்கும் பொழுது, குதூகுலமான முறையில் சந்தியுங்கள்.

நல்ல நண்பர்களுடன் கலந்துறவாடுங்கள், கெட்ட நண்பராக இருந்து விட்டாலோ..! அவருக்கு ஒரு ஸலாம் கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டே நகர்ந்து விடுங்கள்.

ஒருவர் அந்த இடத்தில் இல்லாத நிலையில், அவரைப் பற்றி பிறர் குறைகூறுவார்களென்றால், அந்த இடத்தில் உங்களது அந்த நண்பர் இருந்தால், எவ்வாறு தனது நியாயங்களைக் கூறி வாதாடுவாறோ அவ்வாறே, உங்களது நண்பருக்காக நீங்கள் பரிந்து பேசுங்கள்.

வழி தவறியவர்களுக்கு வழி காட்டுங்கள், குறிப்பாக இரண்டு கண்ணையும் இழந்தவர்களுக்கு நீங்களாகவே சென்று அவர்களுக்கு வழி அறிய உதவுங்கள்.

எப்பொழுதும் சிக்கல் நிறைந்தவராகவே இருக்காதீர்கள், உங்களை அணுகுபவர்களுக்கு எளிதானவராகவே இருங்கள்.

கொடுத்துதவுபவராக இருங்கள், அதற்காக கையை ஒரேயடியாக விரித்தும் விடாதீர்கள்.

ஏழை, எளியோருக்காக இரக்கப்படுங்கள், அவர்களது பெற்றோர்கள் மீது அன்பு காட்டுங்கள்.

பிறர் அறிந்தோ அல்லது அறியாமலோ செய்த தவறுக்காக அவர் மீது பழிக்குப் பழி வாங்கத் துடிக்காதீர்கள். அவர் செய்த தவறின் பின்விளைவுகள் பற்றி அவருக்கு எடுத்துச் சொல்வதன் மூலம், அவர் அறியாத ஒன்றை நீங்கள் அவருக்கு கற்றுக் கொடுங்கள்.

மோசமான குணங்கள்

சமூக உறவு மேம்பாட்டை வளர்க்க விரும்புகின்ற ஒருவர், சமூக உறவுகளைச் சிதைக்கக் கூடிய காரணங்களைப் பற்றியும் அறிந்து, அவற்றிலிருந்து தவிர்ந்து வாழ்வதும் கடமையாகும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அது சமூக உறவுகளைப் பாதிப்படையச் செய்யக் கூடிய, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, சமூக உறவுகளை மேம்படுத்துபவைகள் குறித்து அறிந்து வைத்திருக்கக் கூடிய ஒருவர், பாதிப்படையச் செய்யக் கூடியவைகளையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

ஒரு முஸ்லிம் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளக் கூடியவைகள் :

உணர்ச்சி வசப்படுபவராக, எளிதில் கோபமடைபவராக இருத்தல் கூடாது.

பிறரிடம் கெட்ட உறவுகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது.

பிறருக்குத் தேவையற்ற அம்சங்களைப் பற்றி அவரிடம் பேசாதீர்கள்.

ஆணவம் கொள்ளாதீர்கள். குறிப்பாக ஒருவர் ஏழையாக இருப்பார். ஆனால் பிறரிடம் பழகும் பொழுது தன்னை மிகப் பெரும் செல்வந்தர் போலக் காட்டிக் கொள்வார், ஆனால் மற்றவர்கள் அவர் வசதி இல்லாதவர் என்று அறிந்திருந்திக்கின்ற நிலையிலும் இவ்வாறு அவர் செயல்படுவார். இது ஒரு முஸ்லிமிடம் இருக்கக் கூடாத செயலாகும்.

பிறரை குற்றம் சுமத்திக் கொண்டே இருக்காதீர்கள்.

பிறர் உங்களது உரையாடலைக் கேட்க விருப்பமில்லாத நிலையிலும், உங்களது பேச்சைக் கேட்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் அல்லது அவர்களே உங்களைத் தவிர்த்து விடுவார்கள்.

இரண்டு முகம் காண்பிப்பவராகவும் இருக்காதீர்கள்.

பிறரது மூதாதையர்கள் பற்றி தோண்டி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்.

முஸ்லிம் சகோதரனது கஷ்ட காலத்தைப் பார்த்து, சந்தோசப்படாதீர்கள்.

இறந்து விட்ட முன்னோர்கள் அல்லது நல்ல அந்தஸ்துள்ள பெரியார்களைப் பற்றி குறை சொல்லித் திரியாதீர்கள்.

அடுத்தவர் குறைகளை வெளிப்படுத்துவதற்கென்றே, அவர்களது குறைகளைத் தேடி அலையாதீர்கள்.

சந்திக்க இயலாத நிலையைத் தவிர, ஒரு முஸ்லிமிடருந்து இன்னொரு முஸ்லிம் மூன்று நாளைக்கு மேல் தவிர்ந்து வாழக் கூடாது.

பிரச்னைகளை உருவாக்குபவராகவும், குழப்பங்கள் விளைவிப்பராகவும் இருக்காதீர்கள்.

ஒருவர் அல்லது ஒருத்தியைப் பற்றிக் கூறும் பொழுது, அது உண்மையாக இருந்தாலும் கூட, பிறர் விரும்பாத ஒன்றை அல்லது அவர் வெறுக்கக் கூடிய ஒன்றைப் பற்றி பிறரிடம் கூறித் திரியாதீர்கள்.

பிறருக்குப் புரியாத புதிராகவும் நீங்கள் இருந்து விடாதீர்கள்.

பிறரது விவகாரத்தில் எப்பொழுதும் மூக்கை நுழைத்துக் கொண்டே இருக்காதீர்கள்.

உளவு வேலை பார்க்காதீர்கள்.

மக்களுக்குப் பயன்படுகின்ற பொருள்களை போட்டி போட்டுக் கொண்டு, போட்டியின் காரணமாக அதன் உரிய விலையை விட உயர்த்திக் கேட்காதீர்கள்.

பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள்.

முஸ்லிம் சகோதரனை வெறுக்காதீர்கள்.

பிறரது கெட்ட நடத்தைகள் பற்றி புறம் பேசாதீர்கள்.

பிறரை ஏளனம் செய்வது மற்றும் நக்கலாகச் சிரிப்பது, குத்திப் பேசுவது அல்லது இரட்டை அர்த்தத்துடன் பேசாதீர்கள்.

பிறரை கண்ணியக் குறைவாக எடுத்துக் காட்டி, அவர்களை மட்டம் தட்டுவது மற்றும் வழி கெடுத்தும் விடாதீர்கள்.

ஏமாளியாகவும் அல்லது ஏமாற்றுபவராகவும் இருக்காதீர்கள்.

பொருளாதாரப் பிராணியாகவோ அல்லது கஞ்சனாகவோ இருந்து விடாதீர்கள்.

நயவஞ்சகத்தனத்துடனோ அல்லது பயத்தைக் கட்டுப்படுத்த இயலாதவராகவோ அல்லது ஆபத்தான வேலைகளில் அதனை விட்டு வெருண்டோட இயலாதவராகவும் இருந்து விடாதீர்கள்.

சடைவுடனும், எப்பொழுது பார்த்தாலும் குற்றம் சொல்லிக் கொண்டும், எதிலும் திருப்தி அடையாதவராகவும் இருக்காதீர்கள்.

உதவி செய்வது கொண்டும், தான தர்மங்கள் செய்வது கொண்டும், பரோபகாரத் தன்மை கொண்டும் பிறரது கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள்.

சுயநலக்காரராகவோ, தன்னைத் தானே பெரியவராகவோ மற்றும் தன்னுடைய தேவைகள் நிறைவேறினால் போதுமானது, பிறர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பது போன்ற குணமுடையவராக இருக்காதீர்கள்.

பிறருக்கு உதவி செய்ய ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவ்வாறு உதவி செய்பவரை உதவி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தாதீர்கள்.

ஒருவரது முன்னிலையிலேயே அவரைப் பற்றிப் புகழாதீர்கள் அல்லது தரம் தாழ்த்திப் பேசாதீர்கள்.

கெட்ட நடத்தை உடையவர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பதும் அல்லது பணக்காரர்கள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பதும் தவறான பழக்கவழக்கங்களாகும்.

உரக்கப் பேசாதீர்கள்

பிறர் மீது வன்முறையாகவோ அல்லது கடினமாகவோ நடக்காதீர்கள்.

தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது அல்லது தன்னை அதிகப்படியாக தகுதியுள்ளவராக எண்ணிக் கொள்வதும் தவறாகும்.

பொய் பேசாதீர்கள்

பிறரிடம் பேசும் முறைகள்


--------------------------------------------------------------------------------பேசுவதும் - கேட்பதும்பேச்சுக் கலை என்பது மக்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய சிறந்ததொரு ஊடகச் சாதனமாகும். இது ஒரு மனிதனின் சுய கௌரவம் மற்றும் பண்பாடுகளை வளர்த்துக் கொள்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும் பயன்படுவதாக அமைகின்றது.சிறந்த முறையில் தெளிவான முறையில் பேசுவது ஒரு மனிதனின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும், ஒரு நல்ல முஸ்லிம் இந்தப் பண்புகளைக் கைவரப் பெற்றவனாக இருத்தல் வேண்டும். ஒரு ஹதீஸின்படி, ஒருவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

ஒரு முஸ்லிம் ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசக் கூடாது, அச்சமயங்களில் இது அமைதியாக இருக்கக் கூடிய நேரம் என்பதை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும். வெட்டிப் பேச்சுக்களில் பொய்யும் மற்றும் வீணான பேச்சுக்களும் தான் அதிகம் இருக்கும். இவ்வாறாக வேளைகளில், பேசக் கூடியவரை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்துவது அங்கிருக்கக் கூடிய முஸ்லிமின் கடமையாகும். வெட்டிப் பேச்சுக்களில் ஈடுபடாமல் அமைதியாக இருப்பது என்பது ஒரு பண்பாடான பழக்க வழக்கமாகும். இது அடுத்தவர்களை எரிச்சலடையச் செய்யாது.

தனக்கு சாதகமோ அல்லது பாதகமோ நேரிடினும் ஒரு முஸ்லிம் எப்பொழுதும் உண்மையையே பேச வேண்டும். கசப்பானதாக இருப்பினும் சரியே, உண்மையை எப்பொழுதும் பேச வேண்டும்.

ஒன்றைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் ஒரு முஸ்லிம் தான் எதைப் பற்றிப் பேசப் போகின்றோம் என்பதைப் பற்றி நன்கு ஆராய்ந்து பேச வேண்டும். தான் மன்னிப்புக் கேட்கும் விதத்தில் அல்லது வருத்தம் தெரிவிக்கும் விதத்தில் அமைந்து விடக் கூடிய பேச்சுக்களைக் கண்டிப்பாக முன் கூட்டியே தவிர்ந்து பேசுவது ஒரு முஸ்லிமிற்கு அழகாகும்.

பேச்சில் எளிமையும், கருத்துச் செறிவும் அமையப் பேசுவது சிறப்பான பேச்சுக் கலையாகும். ரொம்பவும் நிறுத்தி நிதானித்து மற்றும் விட்டு விட்டு நிறுத்தி நிறுத்திப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற விதத்தில் வார்த்தை ஜாலங்கள் மற்றும் கடினமான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பார்வையாளர்களை அமைதியாகப் பார்த்து, அவர்கள் மீது தாக்கம் ஏற்படுவது போல் பேசுவது விரும்பத்தக்கதாகும்.

ஒவ்வொரு பேச்சுக்கும் அதன் தலைப்புக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இருக்கின்றன. எனவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து உரையாற்ற வேண்டும்.

ஒரு முஸ்லிம் தான் என்ன பேசுகின்றோமோ அதைப் பற்றிய தெளிவான அறிவும் மற்றும் மிகச் சரியான ஆதாரம் மற்றும் உண்மைத் தகவல்களுடன் உள்ளவற்றையே பேச வேண்டும்.

பேசும் உரைகளை சரியான முறையில் பார்வையாளர்களால் கிரகித்துக் கொள்ள இயலவில்லை எனில், அதனை மீண்டும் அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி விளக்கிச் சொல்வது பேசுபவரது பண்பாடான செயல்பாடாகும்.

அவசரஅவசரமாக பேசிக் கூடாது. ரொம்பவும் மெதுவாகவும் அல்லது மிகவும் வேகமாகவும் பேசுவதையோ மற்றும் உரத்த சப்தத்துடன் அல்லது மிகவும் மெதுவாகவும் பேசுவதைத் தவிர்த்துக் கொள்வதுடன், இத்தகைய பேச்சுக்கள் கேட்போரை சளிப்படையச் செய்து விடும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் போல இரண்டு வார்த்தைகளுக்கிடையே மிக நீண்ட இடைவெளி கொடுத்து நிறுத்தி நிதானித்துப் பேசுவதும் கூட பார்வையாளர்களைச் சளிப்படையச் செய்து விடும்.

1 comment:

  1. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி இதை போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் Latest Tamil News

    ReplyDelete

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை
கடலூர் மாவட்டம்